நீலகிரி: தொடரும் அதி கனமழையால் நீலகிரி மாவட்டத்தில் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்று ஆட்சியர் எச்சரித்துள்ளார்.
மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை கொட்டி வருகிறது. அதன் காரணமாக நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. கோவை மாவட்டம் பில்லூர் அணையின் நீர்மட்டம் 97 அடியை எட்டி உள்ளதால் அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே திறந்து விடப்படுகிறது.
அதன் காரணமாக பவானி ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.தேசிய பேரிடர் மீட்பு குழுவினரும் தயார் நிலையில் உள்ளனர். கோவையை தொடர்ந்து நீலகிரியிலும் கனமழை கொட்டி வருகிறது.
பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருவதால் பல இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்தன. உதகை பேருந்து நிலையம் அருகே எரிவாயு சிலிண்டர் வாகனம் மீது உயரழுத்த மின் கம்பிகள் அறுந்து விழுந்தன. உடனடியாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
இந் நிலையில் உதகையில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா ஆய்வு செய்தார். பின்னர் பேசிய அவர், நீலகிரி மாவட்டத்துக்கு வரும் 8ம் தேதி வரை ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே மக்கள் தேவையின்றி வெளியேற வேண்டாம். வீடுகளுக்கு அருகே அபாயகரமான வகையில் மரங்கள் இருந்தால் நிவாரண முகாம்களுக்கு சென்று தங்கிக் கொள்ளலாம் என்று அறிவுறுத்தியுள்ளார்.