டெல்லி: நீலகிரி ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவை பணியிட மாற்றம் செய்யலாம் என தமிழகஅரசுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் யானைகள் வழித்தடத்தை பலர் ஆக்கிரமித்து, கட்டிட்ங்கள் கட்டப்பட்டதை, அறிந்து, அதை அகற்றும் பணியில் அப்போது ஆட்சியராக இருந்த இன்னசென்ட் திவ்யா கடுமையான நடவடிக்கை எடுத்தார். இதுதொடர்பான வழக்கில், உச்சநீதி மன்றம் ஆட்சியர் திவ்யாவின் நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்ததுடன், நீலகிரியில் யானைகள் வழித்தடத்தில் உள்ள கட்டடங்கள் மற்றும் ரெசார்ட்டுகளை உடனடியாக அவர் அகற்றவும், விதிமுறைகளை மீறி புதிய கட்டடங்களுக்கு அனுமதி அளிக்கக் கூடாது எனவும் கூறியிருந்தது.
இதனால், ஆட்சியாளர்கள் இன்னசென்ட் திவ்யாவை இடமாற்றம் செய்யும் பணியை மேற்கொண்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. அதைத்தொடர்ந்து, நீலகிரி ஆட்சியரை மாநில அரசு பணியிட மாற்றம் செய்யக்கூடாது என்றும் உத்தரவிட்டது. இது ஆட்சியர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.
இதனால்,கடந்த 2017ம் ஆண்டு முதல் நீலகிரி ஆட்சியராக இன்னசென்ட் திவ்யா தொடர்ந்து பணியாற்றி வருகிறார். ஒரே இடத்தில் 5 ஆண்டு களாக பணியாற்றி வரும் அவரை பணியிட மாற்றம் செய்ய அனுமதிக்க வேண்டும் என தற்போது, மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழகஅரசு உச்சநீதிமன்றத்தில் இடைக்கால மனு அளித்தது. அதில், நிர்வாக ரீதியில் மாற்றங்கள் செய்ய வேண்டும் என்பதால், ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவை பணியிட மாற்றம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கோரப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், நீலகிரி ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவை இடமாற்றம் செய்ய அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.