பெங்களூரு:
கர்நாடக முன்னாள் முதல்வர் மகனும் நடிகருமான நிகில் குமாரசாமி நிச்சயதார்த்தம் கோலாகலமாக நடைபெற்றது. 30 வகையான விருந்துகளுடன் தடபுடலாக நடைபெற்ற இந்த நிச்சயதார்த்தத்தில் மணமக்கள் வைர மோதிரங்கள் மாற்றிக்கொண்டனர்.
முன்னாள் கர்நாடக முதல்வரும், மதசார்பற்ற ஜனதாதளம் தலைவர் எச்.டி.தேவகவுடாவின் மகனுமான எச்.டி. குமாரசாமி மற்றும் அனிதா குமாரசாமி ஆகியோரின் மகனும் திரைப்பட நடிகருமான நிகில் குமாரசாமிக்கும், முன்னாள் கர்நாடக வீட்டுவசதி அமைச்சர் எம்.கிருஷ்ணப்பாவின் பேத்தி ரேவதி என்ற ரிட்டுவுக்கும் பெங்களூரில் உள்ள ஒரு தனியார் விடுதியில் பிரமாண்டமாக நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
பெங்களூர் டர்ஃப் கிளப் அருகே தாஜ் வெஸ்ட் எண்டில் இந்த நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதையொட்டி, அந்த விடுதி முழுவதும் அழகிய வெள்ளை நிற வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இதற்கான மலர்கள் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் இருந்து இருந்து பெறப்பட்டதாக கூறப்படகிறது.
மணமக்கள் இருவரும் தங்கம் மற்றும் கிரீம் வண்ணங்களிலான உடைகள் அணிந்திருந்தனர். மணமகள் ரேவதி லேசான பீச் மற்றும் கிரீம் சேலை அணிந்திருந்தார், நிகில் ஷெர்வானி அணிந்திருந்தார்.
நிச்சயதார்த்தத்தின்போது, இருவரும் அழகிய ரோஜா மற்றும் மல்லிகை மாலைகள் அணிந்திருந்தனர். இருவரும் ஒருவருக்கொருவர் மாலைகள் மாற்றிக்கொண்டனர். தொடர்ந்து வைரத்திலான மோதிரங்களும் மாற்றிக் கொண்டனர். அதைத்தொடர்ந்து தனது தாத்தா தேவகவுடாவிடம் ஆசி பெற்றனர்.
கோலாகலமாக நடைபெற்ற இந்த நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு, குமாரசாமி குடும்ப உறுப்பினர்கள் மற்றும் மணமகள் வீட்டைச் சேர்ந்தவர்கள், புனித் ராஜ்குமார் உள்பட திரையுலக நட்சத்திரங்கள், முதல்வர் எடியூரப்பா உள்பட அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் டி.கே.சிவகுமார், கே.ஜே.ஜார்ஜ் மற்றும் ஜி.பராமேஸ்வரா, எம்.கிருஷ்ணப்பா, ஐ.பி.எஸ் அதிகாரி அலோக் குமார், முன்னாள் டி.ஜி மற்றும் கர்நாடகாவின் ஐ.ஜி., நீலமணி ராஜு, ஜே.டி.உள்பட சுமார் 6ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.
விருந்தினர்களுக்கு 30 வகையான பலங்காரங்களுடன் சுவைமிகு உணவு வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இவைகளில், 9 வெவ்வேறு வரவேற்பு பானங்கள், 10 வெவ்வேறு பக்க உணவுகள் (side dishes) மற்றும் 14 வகையான உணவுகள் மற்றும் ஏழு வகையான இனிப்பு வகைகள் இடம்பெற்றிருந்தாகவும் கூறப்படுகிறது.