புதுச்சேரி: கொரோனா பரவலை கட்டுப்படுத்த புதுச்சேரியில் இரவு மற்றும் வார இறுதி லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை பொறுப்பு துணைநிலை ஆளுநர் தமிழிசை வெளியிட்டுள்ளார்.,
கொரோனா தொற்று அதிகரிப்பதால் புதுச்சேரி அரசு அடுத்தடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நகரில் தடுப்பூசி போடப்படுவது மற்றும் மருத்துவமனைகளை ஆய்வு செய்த ஆளுநர் தமிழிசை, மாநிலத்தில் போதுமான அளவிலான உயிர்காக்கும் மருந்துகள் இருப்பதாகவும், பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என நம்பிக்கை தெரிவித்தார்.
புதுச்சேரி மாநிலத்தில் தொற்று பரவலை தடுக்கும் வகையில் கடந்த ஏப்ரல் 11ஆம் தேதியன்று முகக் கவசம் கட்டாயமாக்கப்பட்டது, மேலும், மக்கள் நடமாட்டத்தைக் குறைக்க வேறு சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன. அதையடுத்து இப்போது இரவு பொதுமுடக்கம் மற்றும் வார இறுதி நாட்கள் முழு ஊரடங்கும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி, இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், வெள்ளிக்கிழமை இரவு முதல் திங்கள்கிழமை காலை வரை வார இறுதிநாட்கள் முழு பொதுமுடக்கமும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழிசை வெளியிட்ட செய்திக்குறிப்பில்,
புதுச்சேரியில் வரும் 23ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) இரவு முதல் திங்கள்கிழமை காலை வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும்.
மற்ற நாட்களில் அங்காடிகள் பகல் 2 மணி வரை இயங்கும். பகல் 2 மணிக்குப் பிறகு உணவு விடுதிகளில் உணவு வாங்கிச் செல்ல மட்டுமே அனுமதி.
திருமண நிகழ்ச்சிகளில் குறிப்பிட்ட அளவில் மட்டும் ஆட்கள் பங்கேற்க அனுமதி உண்டு.
ஊர்வலங்கள், கோயில் தேரோட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பாண்லே கடைகள் மூலம் குறைந்த விலையில் முகக் கவசம் மற்றும் கிருமிநாசினி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.