நியூயார்க்: நைஜீரிய நாட்டைச் சேர்ந்த கோஸி ஒகோன்ஜோ-இவீலா, WTO எனப்படும் உலக வர்த்தக அமைப்பின் இயக்குநராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்த அமைப்பின் உயர்ந்த பதவியில் அமரும் முதல் ஆப்ரிக்கர் மற்றும் முதல் பெண் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது 66 வயதாகும் கோஸி ஒகோன்ஜோ-இவீலா, மொத்தம் 164 நாடுகளுடைய பிரதிநிதிகளால், இப்பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

“கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட உலகளாவிய பொருளாதார மற்றும் சுகாதார விளைவுகளில் கவனம் செலுத்தி, உலகளாவியப் பொருளாதாரம் மீண்டும் அதன் வழியில் பயணிப்பதை உறுதி செய்வதே தனது முதன்மைப் பணியாகும்.

எங்கள் அமைப்பு பலவிதமான சவால்களை எதிர்கொண்டுள்ளது. அதேசமயம், அனைவரும் இணைந்து செயல்படுவதன் மூலம், இந்த அமைப்பை வலுப்படுத்தி, நடைமுறை உலகின் எதார்த்தத்திற்கு ஏற்ப இந்த அமைப்பை மாற்றிக்கொள்ள முடியும்” என்றுள்ளார் கோஸி ஒகோன்ஜோ-இவீலா.

இந்தப் பொறுப்பிற்கு கோஸி ஒகோன்ஜோ-இவீலா தேர்வு செய்யப்படுவதில், தற்போதைய அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் முழு ஆதரவு உண்டு. இவரின் தேர்வை முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்ப் தடுத்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.