சமூக வலைத்தளங்கள் மற்றும் திருமண தகவல் தளங்கள் மூலம் தொடர்பு கொண்டு 300 பெண்களை ஏமாற்றிய நைஜீரிய வாலிபர் நொய்டா-வில் இன்று கைது செய்யப்பட்டார்.
மேட்ரிமோனியல் இணையதளத்தில் பதிவு செய்திருந்த உத்தரபிரதேச மாநிலம் மீரட்டைச் சேர்ந்த பெண் ஒருவரை தொடர்பு கொண்ட கரூபா க்ளும்ஜெ (38) என்ற நைஜீரிய வாலிபர், தனது பெயர் சஞ்சீவ் சிங் என்றும் தான் கனடாவில் வாழும் இந்தியர் என்றும் அறிமுகம் செய்துள்ளார்.
பின்னர், பல்வேறு கதைகளைக் கூறி தனது பல்வேறு வங்கிக் கணக்குகளுக்கு பணம் பரிமாற்றம் செய்ய சொல்லி சுமார் 60 லட்சம் ரூபாய் வரை ஏமாற்றியிருக்கிறார்.
ஒருகட்டத்தில் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த பெண் இதுகுறித்து காவல்துறையில் புகார் அளித்தார்.
அவரது புகாரின் பேரில் கரூபா-வை கைது செய்த நொய்டா சைபர் க்ரைம் போலீசார் அவரிடம் விசாரித்ததில் இதுவரை சுமார் 300 பெண்களை ஏமாற்றி அவர்களிடம் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் பெற்றது தெரியவந்துள்ளது.
வியாபாரம் செய்வதாக கூறி விசா வாங்கிய கரூபா முதல்முறையாக 2019 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியா வந்துள்ளார். 2022 ம் ஆண்டு மார்ச் மாதம் மருத்துவ சிகிச்சை என்ற பெயரில் இந்தியா வந்த இவரின் விசா மே 22 ம் தேதியுடன் முடிவடைந்தது.
விசா முடிந்தும் இந்தியாவில் தங்கி இருந்த இவர் பெண்களை ஏமாற்றிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருமண தகவல் தளங்களில் வெவ்வேறு வாலிபர்களின் புகைப்படங்களை பதிவிட்டு பெண்களை ஏமாற்றி வந்த கரூபா இதன்மூலம் கிடைத்த பணத்தை அவ்வப்போது நைஜீரியாவில் உள்ள தனது குடும்பத்தினருக்கு அனுப்பியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இவர் மீது, இந்திய தண்டனைச் சட்டம் 406 (நம்பிக்கை துரோகம்), 419 (ஆள்மாறாட்டம்) மற்றும் 420 (ஏமாற்றுதல்), மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் விதிகளின் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.