சென்னை: கேரள தங்க கடத்தல் விவகாரம் தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் சென்னையில் ரகசிய விசாரணை நடத்துவதாக தகவல் வெளியாகி உள்ளது.
கேரளாவில் 15 கோடி ருபாய் மதிப்புள்ள 30 கிலோ தங்கம் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கடத்தல் சம்பவத்தில் தகவல் தொடர்புத் துறையில் மேலாளராக பணியாற்றிய ஸ்வப்னா சுரேஷூக்கு தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, தலைமறைவான ஸ்வப்னா சுரேஷ் மற்றும் சந்தீப் நாயர் இருவரும் தீவிர தேடுதல் வேட்டைக்கு பின்னர் பெங்களூருவில் கைது செய்யப்பட்டனர். பின்னர் கொச்சியில் உள்ள என்.ஐ.ஏ. நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து, என்.ஐ.ஏ.வும், சுங்கத்துறை இலாகாவும் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர். இந் நிலையில், கேரள தங்க கடத்தல் விவகாரம் தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் சென்னையில் ரகசிய விசாரணை நடத்துவதாக தகவல் வெளியாகி உள்ளது.
டி.ஐ.ஜி. கல்பனா தலைமையில் சென்னையில் ரகசிய விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், 5 அதிகாரிகள் கொண்ட குழு சென்னையில் ரகசிய விசாரணை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. கடத்தல் தங்கம் தீவிரவாத செயலுக்கு பயன்படுத்தப்பட்டதா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.