சேலம்: சேலம் மாவட்டத்தில் யூடியூப் பார்த்து துப்பாக்கி தயாரித்த வழக்கில் 3 இளைஞர்கள் கைதான விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கு தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் அவர்கள் தங்கியிருந்த வீட்டில் சோதனை நடத்தி வருகின்றனர்.
சேலம் செட்டிசாவடி பகுதியில் பட்டதாரி இளைஞா்கள் நாட்டுத் துப்பாக்கிகளைத் தயாரித்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது, கடந்த மே 19 ஆம் தேதி போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தபோதுஇ, அப்போது அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேரை நிறுத்தி சோதனை செய்து அவா்களிடமிருந்து 2 நாட்டுத் துப்பாக்கிகள், வெடிமருந்து, முகமூடிகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையில், பிடிபட்டவா்கள் சேலம், கிச்சிபாளையம், சன்னியாசிகுண்டு பகுதியைச் சோ்ந்த எம்.நவீன் (25), செவ்வாய்ப்பேட்டை, மரமண்டி ஜம்புலிங்கம் தெருவைச் சோ்ந்த ஜெ.சஞ்சய் பிரகாஷ் (24) என்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் ஓமலூா் போலீஸாா் கைது செய்து விசாரித்தனா்.
விசாரணையில், பொறியியல் பட்டதாரிகளான இருவரும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது நாட்டம் கொண்டவா்கள் என்பதும், விடுதலைப் புலிகள் இயக்கத்தைப்போல புதிய இயக்கத்தைத் தொடங்கி ஆயுதப் போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்ததும் தெரியவந்தது. இதற்காக செட்டிசாவடி பகுதியில் வீட்டை வாடகைக்கு எடுத்து, யுடியூப் பார்த்து நாட்டுத் துப்பாக்கிகளை தயாரித்து வந்தது தெரியவந்தது.
இதுதொடா்பாக ஆயுதச் சட்டம்-1959 மற்றும் வெடிபொருள் சட்டம்-1908 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட இருவரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். அவருக்கு உதவியதாக ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்குத் தொடா்பான விவரங்கள் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இதுதொடா்பாக தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) விசாரணை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தற்போது விசாரணையைத் தொடங்கியுள்ளனா். இந்த வழக்கு தொடர்பாக சேலம் செட்டிசாவடி பகுதியில் இளைஞர்கள் தங்கியிருந்த வீட்டில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.