சென்னை: பெங்களூரு ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்பு விவகாரத்தில், சந்தேகிக்கப்படும் நபர்  கைது செய்யப்பட்ட நிலையில், அவர் சென்னையில் தங்க உதவி செய்தவர்கள்  இருவரை தேடும் பணியில் என்ஐஏ அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். இதுதொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் சென்னையின் பல இடங்களில் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

2024 மார்ச் மாதம் 1ந்தேதி அன்று பெங்களூரில் உள்ள  பிரபல உணவகமாக ராமேஸ்வரம் கபே உணவகத்தில் அடுத்தடுத்து இரண்டு வெடிகுண்டுகள் வெடித்தது. இதனால் ஏற்பட்ட  வெடி விபத்தில் பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் (NIA) வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து, குற்றவாளிகளுக்கு தொடர்புடையதாக கருதப்படும் பகுதிகள் மற்றும்,   சென்னை கர்நாடகா உள்ளிட்ட 18 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை மற்றும் சோதனைகள் நடத்தி பல்வேறு முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றியுள்ளனர்.

மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த குற்றவாளிகளின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டு தேடிய நிலையில்,  முசாவீர் சாஹிப், அப்துல் மதீன் தாஹா, முஷாரின் ஷெரீப்  ஆகிய  மூன்று நபர்களை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். ஆகிய மூவரை கைது செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்ட நிலையில் அப்துல் மதீன் தாஹா என்பவர் குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு முன்பு சென்னைக்கு வந்து தங்கியிருந்ததும் குண்டுவெடிப்பிற்கு சதி திட்டம் தீட்டியதும் தெரியவந்தது.

இதையடுத்து அப்துல் மதீன் தாஹா என்பவரை 10 நாட்கள் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் காவலில் எடுத்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். அப்போது அவரை சென்னைக்கு அழைத்து வந்து அவர் தங்கி இருந்த தனியார் விடுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரணை செய்து வாக்குமூலத்தைப் பதிவு செய்தனர். மேலும், அப்துல் மதீன் தாஹா என்பவர் சென்னையில் தங்கி இருந்தபோது இரண்டு நபர்கள் அவருக்கு உதவிகள் செய்தது தெரியவந்ததை அடுத்து ராயப்பேட்டை பகுதி சேர்ந்த இருவர் இவருக்கு உதவியது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த நிலையில், இவர்கள் எதன் அடிப்படையில் அப்துலுக்கு உதவி செய்தார்கள், மற்றும் இந்த வெடிகுண்டு சம்பவம் தொடர்பாக இவர்களுக்குள் ஏதாவது தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில் விசாரணை செய்வதற்காக பெங்களூரு தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சென்னையில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் சென்னையில் தங்கி இருந்த அப்துல் மதீன் தாஹாவிற்கு உதவிய இருவர் எங்கு பதுங்கி உள்ளார்கள்? என்ற விவரங்களை சேகரித்து அவர்களை கைது செய்யும் நடவடிக்கைகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் ஈடுபடுபவர்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.