மும்பை
கட்டுமான நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கான கடன் தவணை செலுத்துவதைத் தடை செய்து தேசிய வீட்டுவசதி வங்கி உத்தரவிட்டுள்ளது.
தற்போது ரியல் எஸ்டேட் துறையில் மிகவும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதனால் பல கட்டுமான நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்குப் பல சலுகைகள் அளிக்கின்றன. வீடு வாங்குவோர் முன் பணமாக 5% வரை அளித்து விட்டு மீதிப் பணத்தைக் கட்டுமானம் முடிந்ததும் செலுத்தலாம் என பலரும் அறிவித்து வருகின்றனர். இடையில் உள்ள மாத்ததவணைகளை கட்டுமான நிறுவனங்கள் வாடிக்கையாளருக்கு பதில் செலுத்தி விடுவார்கள்.
இது குறித்து வங்கிகள் கடும் அதிருப்தியை தெரிவித்திருந்தனர். இதன் மூலம் கட்டுமான நிறுவனங்கள் பெருமளவில் கடன் பெற்று அந்தப் பணத்தை தங்களின் மற்ற நிறுவனங்களுக்கு மாற்றி விடுவதாக புகார்கள் எழுந்துள்ளன. வாடிக்கையாளர்கள் பெயரில் கடன் வாங்கி அதைக் கொண்டு மற்ற நிறுவனங்களை நடத்தி வருவதை தேசிய வீட்டு வசதி வங்கி கடுமையாக கண்டித்துள்ளது.
கடந்த 2013 ஆம் வருடம் ஒரு சில கட்டுமான நிறுவனங்கள் வீட்டை ஒப்படைக்கும் வரை வட்டியை தாங்கள் செலுத்தி விடுவதாக உறுதி அளித்திருந்தன. அந்த நிறுவனங்களும் குறைந்த வட்டியில் வாடிக்கையாளர்கள் பெயரில் கடன் பெற்று முதலீட்டைப் பயன்படுத்திக் கொண்டு வாடிக்கையாளர்களுக்கு பதிலாக வட்டியைச் செலுத்தி வந்தன. அப்போதே தேசிய வீட்டு வசதி வங்கி இது குறித்து கட்டுமான நிறுவனங்களுக்கு எச்சரிக்கை அளித்திருந்தது.
தற்போது வாடிக்கையாளர்களின் வீட்டுக்கடனுக்கான மாதத் தவணைகளை கட்டுமான நிறுவனங்கள் செலுத்த தேசிய வீட்டு வசடி வங்கி தடை விதித்துள்ளது. மேலும் அவ்வாறு செலுத்துவோருடைய கடன்கள் உடனடியாக ரத்து செய்யப்பட்டு குடியிருப்புக்கள் பறிமுதல் செய்யப்படும் என அறிவித்துள்ளது. அத்துடன் அனைத்து வீட்டுக் கடன் வழங்கும் வங்கிகளுக்கும், நிதி நிறுவனங்களுக்கும் இதே உத்தரவை அளித்துள்ளது.