டில்லி

மாசு உண்டாவதைத் தடுக்க டில்லி அரசு எடுத்த நடவடிக்கைகளை தெரிவிக்காவிடில் அபராதம் விதிக்கப்படும் என தேசிய பசுமை தீர்ப்பாயம் அறிவித்துள்ளது.

டில்லியில் சுற்றுச்சூழல் மாசு அடைவது அதிகரித்து வருகிறது.   கிரிக்கெட் போட்டியின் போது இலங்கை ஆட்டக்காரர்கள் மாசு காரணமாக முகமூடி அணிந்து விளையாடிய படங்கள் வெளியாகின.  தேசிய பசுமை தீர்ப்பாயம் மாசை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கும் படி டில்லி மாநில அரசுக்கு பலமுறை எச்சரிக்கை விடுத்தும் மாசு குறையாமல் உள்ளது.

இன்று கூடிய தீர்ப்பாயத்தின் அமர்வு இது குறித்து டில்லியை ஆளும் ஆம் ஆத்மி அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.  தீர்ப்பாயம், “இது வரை நீங்கள் மாசுக்கட்டுப்பாட்டுக்காக எடுத்த்த நடவடிக்கைகளில் ஒன்றையாவது குறிப்பிட்டு சொல்ல முடியுமா? டில்லி மக்கள் எப்போதுமே மாசு ஏற்படுவதால் துயரப்பட்டுக்கொண்டே இருக்க வேண்டுமா? அனத்து அதிகாரிகளுக்கும் அவசர கதியில் இது குறித்து நடவடிக்கை எடுக்க நாங்கள் சொல்லியும் ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.  குழந்தைகள் துன்பப்படுவதைக் கூட உங்களால் புரிந்துக் கொள்ள முடியவில்லையா?

இலங்கை கிரிக்கெட் வீரர்கள் முகமூடி அணிந்து விளையாடும் அளவுக்கு நிலைமை சீர் கெட்டுள்ளது.  மாசுக்கு பயந்து ரசிகர்கள் மைதானத்துக்கு பக்கம் கூட வரவில்லை.  இந்த நிகழ்வு உலகெங்கும் ஒளிபரப்படுவது என்பது உங்களுக்கு தெரியாதா?  இருசக்கர வாகனங்களால் மாசு படும் என அதை தடை செய்த நீங்கள் அதற்கேற்றவாறு பேருந்துகளை அதிகப்படுத்தவில்லை.  உங்களுக்கு தெரிந்ததெல்லாம் கலந்துரையாடல் மட்டுமே. அந்த கலந்துரையாடலிலும் ஏதும் நடவடிக்கை எடுத்தாக தெரியவில்லை.  இன்னும் 48 மணி நேரத்துக்குள் நீங்கள் மாசுக் கட்டுப்பாட்டுக்காக எடுத்த நடவடிக்கைகளின் பட்டியல் அளிக்க வேண்டும்.  இல்லையெனில் கடும் அபராதம் விதிக்கப்படும்” என அறிவித்துள்ளது.