டெல்லி
தேர்தல் ஆணையம் அடுத்த மாதம் நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த்தை தொடங்க உள்ளது.

இந்த ஆண்டு இறுதியில் பீகாரில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்தத்தை தேர்தல் கமிஷன் மேற்கொண்டு வருகிறது. கடைசியாக வாக்காளர் பட்டியல் திருத்தப்பட்ட 2003-ம் ஆண்டுக்கு பிறகு வாக்காளர் பட்டியலில் சேர்த்த 3 கோடி பேர் தங்களது குடியுரிமையை நிரூபிப்பதற்காக பிறப்பு சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
சிறுபான்மையினர், பட்டியல் இனத்தினர் ஆகியோரை இதன் மூலம் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கி, அவர்களது வாக்குரிமையை பறிக்க முயற்சி நடப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் இந்த தீவிர சிறப்பு திருத்தம் மேற்கொள்ள தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
உச்சநீதிமன்றத்தில் இதை எதிர்த்து பல்வேறு கட்சிகள் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், குடியுரிமையை பரிசோதிக்க ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, ரேஷன் அட்டை ஆகியவற்றையும் ஆவணங்களாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என கருத்து தெரிவித்தனர். ஆயினும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம், அரசியல் சாசனப்படி கட்டாயம் எனக்கூறிய நீதிபதிகள் இந்த நடவடிக்கையை தொடர அனுமதி அளித்துள்ளனர்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்துக்கு உச்சநீதிமன்றம்அனுமதி அளித்துள்ளதால், இந்த நடவடிக்கையை அடுத்த மாதம் (ஆகஸ்டு) முதல் நாடு முழுவதும் மேற்கொள்ள தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இந்த வழக்கின் அடுத்த விசாரணை 28-ந் தேதி நடைபெறும் நிலையில், அதன் மீது பிறப்பிக்கப்படும் உத்தரவை பொறுத்து இந்த விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.