நியூசிலாந்து தேர்தலில் பிரதமர் ஜெசிந்தா பிரம்மாண்ட வெற்றி 

Must read

வெலிங்டன்

நியூசிலாந்து நாட்டில் நடந்த தேர்தலில் தற்போதைய பிரதமர் ஜெசிந்தா அறுதி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளார்.

நியூசிலாந்தில் தற்போது லேபர் கட்சியின் தலைவரான ஜெசிந்தா அர்டர்ன் பிரதமராகப் பதவி வகித்து வருகிறார்.  நியூசிலாந்தில் கடந்த 1996 ஆம் ஆண்டு முதல் விகிதாச்சார வாக்கு முறை நடைமுறையில் உள்ளது.  இந்த முறைப்படி வாக்குகள் எண்ணிக்கை விகிதத்தின்படி ஒவ்வொரு கட்சியும் உறுப்பினர்களைத் தேர்வு செய்யலாம்.  இதுவரை எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

நியூசிலாந்தில் தற்போது நடந்து முடிந்த தேர்தலில் வாக்கு எண்ணிக்கையில் லேபர் கட்சி  அறுதி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது.  மூன்றில் இரு பங்கு வாக்கு எண்ணிக்கை முடிந்து இருந்த போதே லேபர் கட்சிக்கு 49.2% வாக்குகள் கிடைத்துள்ளன.  தற்போது நியூசிலாந்தில் உள்ள 120 உறுப்பினர்களில் லேபர் கட்சிக்கு 64 உறுப்பினர்கள் கிடைக்கும் என எதிர்பார்ப்பு உள்ளது.

எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் கட்சிக்கு 35 உறுப்பினர்கள் கிடைக்கலாம் எனக் கூறப்படுகிறது.  இது கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைந்த எண்ணிக்கையாகும்.  இக்கட்சித் தலைவர் ஜுடித் கோலின்ஸ் மீண்டும் வெற்றி பெற்றுள்ள ஜெசிந்தாவுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

இந்த வெற்றிக்கு காரணம் ஜெசிந்தா ஆர்டர்ன் கொரோனாவை மிக திறமையாகக் கையாண்டது எனக் கூறப்படுகிறது.   தற்போதைய தேர்தலின் போது பிரச்சாரக் கூட்டத்தில் மாஸ்க் அணிய தேவையற்ற சூழல் இருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.   ஜெசிந்தா இந்த தேர்தலை கொரோனா  தேர்தல் என ஜெசிந்தா குறிப்பிட்டு கொரோனா ஒழிப்பை முன்வைத்து பரப்புரை செய்து வந்ததும் குறிப்பிடத்தக்கதாகும்,

More articles

Latest article