வெலிங்டன்: நியூசிலாந்து நாட்டிலுள்ள மிகப்பெரிய ஊடக நிறுவனம் ஒன்று, வெறும் 1 டாலருக்கு விற்பனை செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
அந்நிறுவன உரிமையாளர்கள், அந்த நிறுவனத்தில் பணியாற்றி வரும் தலைமை செயல் அதிகாரிக்குத்தான் இந்த விற்பனையை செய்துள்ளனர்.
ஆஸ்திரேலியாவில் செயல்படும் ‘நைன் என்டர்டெய்மென்ட்’ என்ற பெயரிலான நிறுவனத்துக்கு சொந்தமானது, ‘ஸ்டப்’ எனும் பெயர்கொண்ட நிறுவனம். ஸ்டப் பல்வேறு தினசரி பத்திரிகைகளையும் இணையதளத்தையும் நடத்தி வருகிறது. ஸ்டப் நிறுவனத்தில் மொத்தம் 400 பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட 900 பேர் பணியாற்றி வருகிறார்கள்.
கொரோனா பாதிப்புக்கு முன்னதாகவே, இந்நிறுவனத்தின் வருவாய் குறைந்து வந்த நிலையில், கொரோனா காலத்தில் அதன் விளம்பர வருவாயும் சுத்தமாக நின்று போனது. இந்நிலையில், ஆஸ்திரேலிய பங்குச் சந்தைக்கு, ஸ்டப் நிறுவன விற்பனை குறித்த தகவலை நைன் என்டர்டெய்மென்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அந்த தகவலில், ஸ்டப் நிறுவனத்தை அதன் தலைமை செயல் அதிகாரியான சினேட் பவுச்சர் என்பவருக்கு விற்பனை செய்ய இருப்பதாகவும், அதற்கான நடவடிக்கைகள் இந்தமாத இறுதியில் நிறைவுபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.