ஆக்லாந்து: உலக டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், நியூசிலாந்து அணி முதன்முறையாக ஐசிசி உலக தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.
பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை முழுமையாக வென்றதன் மூலம் இந்த அந்தஸ்தை எட்டியுள்ளது அந்த அணி. இதன்மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் கலந்துகொள்வதற்கான தனது வாய்ப்புகளை அதிகப்படுத்திக் கொண்டுள்ளது அந்த அணி.
மொத்தம் 118 புள்ளிகள் பெற்ற நியூசிலாந்து முதலிடத்திலும், 116 புள்ளிகள் பெற்ற ஆஸ்திரேலியா இரண்டாமிடத்திலும், 114 புள்ளிகள் பெற்ற இந்தியா மூன்றாமிடத்திலும் உள்ளன. நியூசிலாந்து அணி இதுவரை அதிகபட்சமாக 2வது இடம் வரை முன்னேறியுள்ளது.
ஆனால், தற்போதுதான் முதன்முறையாக முதலிடத்திற்கு வந்துள்ளது அந்த அணி. அந்த அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன், டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையிலும் விராத் கோலி மற்றும் ஸ்டீவ் ஸ்மித்தை முந்தி, முதலிடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.