வெலிங்டன்: ஆஸ்திரேலியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி-20 போட்டியில், நியூசிலாந்து அணி 53 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
தற்போது, ஆஸ்திரேலிய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. மொத்தம் 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் இரு அணிகளும் பங்கேற்கின்றன. இந்நிலையில் முதல் போட்டி, பிப்ரவரி 22ம் தேதியான இன்று நடைபெற்றது.
இப்போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீச முடிவெடுத்தது. அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 184 ரன்களைச் சேர்த்தது.
அந்த அணியின் டெவான் கான்வே 59 பந்துகளில் 3 சிக்ஸர்கள் & 10 பவுண்டரிகளுடன் 99 ரன்களைக் குவித்தார். அவர் இறுதிவரை நாட்அவுட். கிளென் பிலிப்ஸ் 30 ரன்களையும், ஜேம்ஸ் நீஷம் 26 ரன்களையும் அடித்தனர்.
அதன்பிறகு, சற்று சவாலான இலக்கை விரட்டிய ஆஸ்திரேலிய அணிக்கு, மிட்செல் மார்ஷ் மட்டுமே அதிகபட்சமாக 45 ரன்கள் அடித்து கைக்கொடுத்தார். அதற்கடுத்து அஷ்டன் ஆகர் 23 ரன்கள் அடித்ததே, இரண்டாவது அதிகபட்ச ரன்கள்தான். வேறு எந்த பேட்ஸ்மெனும் தேவையான ஆட்டத்தை ஆடவில்லை.
இறுதியில், 17.3 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 131 ரன்கள் மட்டுமே எடுத்து, 53 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது ஆஸ்திரேலியா. இதன்மூலம், தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றது நியூசிலாந்து.
நியூசிலாந்து தரப்பில் இஷ் சோதி 4 விக்கெட்டுகளையும், டிம் செளதி, டிரென்ட் பெளல்ட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.