சென்னை பட்டினப்பாக்கம் லூப் சாலையில் ரூ. 14 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள மீன் மார்க்கெட்டை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.

பட்டினப்பாக்கத்தில் இருந்து மெரினா கடற்கரை செல்லும் இந்த லூப் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் அமைக்கப்பட்டிருக்கும் இந்த மார்க்கெட்டில் மொத்தம் 384 கடைகள் அமைக்கப்பட்டுள்ளது.

சுமார் 30 முதல் 50 சதுர அடி உள்ள இந்த கடைகள் இதற்கு முன் அங்கு சாலையில் மீன் விற்பனை செய்துகொண்டிருந்த வியாபாரிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

வாகன நிறுத்துமிடம், கழிவறை வசதி ஆகியவற்றுடன் காற்றோட்டம் மற்றும் வெளிச்சத்துடன் கூடிய இந்த மீன் மார்க்கெட்டில் மழை நாட்களிலும் வியாபாரம் செய்யக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சதுர அடிக்கு ரூ. 50 முதல் ரூ. 80 வாடகை நிர்ணயிக்க சென்னை மாநகராட்சி தீர்மானித்துள்ளது இதன் மூலம் கடை ஒன்றுக்கு ரூ. 1500 முதல் ரூ. 2500 மாத வாடகையாக பெறப்படும் இந்த முடிவுக்கு சென்னை மாநகராட்சி ஆணையர் ஒப்புதல் அளித்திருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஒரு நபர் மட்டுமே நின்று வியாபாரம் செய்யக்கூடிய ஒரு இடத்திற்கு சென்னையின் முக்கிய வர்த்தக பகுதிகளில் தனியார் வசூலிக்கும் வாடகை அளவுக்கு மாநகராட்சி வாடகை நிர்ணயித்திருப்பது வியாபாரிகள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், இங்கு ஏற்கனவே காலம் காலமாக மீன் விற்று வியாபாரம் செய்து கொண்டிருந்த மீனவ பகுதிகளைச் சேர்ந்த மக்கள் இந்த கடைகளுக்கு மாநகராட்சி வாடகை வசூலிக்க கூடாது என்றும் இதன் பராமரிப்பை தங்களிடமே வழங்கவும் கோரிக்கை வைத்துள்ளனர்.