திருச்சூர்
ஒரு கழிவறைக் குழாயில் அடைக்கப்பட்டு கிடந்த குழந்தையின் சடலம் கேரளாவில் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.
கேரளா மாநிலம் திருச்சூர் அருகே வசிப்பவர் அப்துல் ரகுமான். இவரும் இவர் மனைவியும் மருத்துவர்கள் ஆவார்கள். இவர்கள் இருவரும் சேர்ந்து தங்கள் வீட்டில் ஒரு மருத்துவமனை நடத்தி வருகின்றனர். இவர்கள் வீட்டில் உள்ள கழிப்பறையில் செம்மண்ணும் நீரும் தேங்கி உள்ளதாக பணிப்பெண் புகார் அளித்துள்ளார். அதனால் அப்துல் ரகுமான் ஒரு பிளம்பரிடம் அடைப்பை சரி செய்யச் சொல்லி உள்ளார்.
அந்த பிளம்பர் வந்து பார்த்த போது கழிவறைக் குழாயில் பந்து போன்ற ஒரு பொருள் இருப்பதைக் கண்டு எடுக்க முயன்றுள்ளார். ஆனால் அது ஒரு குழந்தையின் தலை எனக் கண்டு அதை பிடித்து இழுத்துள்ளார். ஆனால் அந்த குழந்தையின் சடலம் நன்கு சிக்கிக் கொண்டு இருந்ததால் குழாயை உடைத்து எடுத்துள்ளார்.
அது பிறந்து இரண்டு நாட்கள் ஆன பெண் குழந்தை எனக் கண்டறியப் பட்டுள்ளது. தொப்புள் கொடி கூட நீக்கப் படாத நிலையில் அந்தக் குழந்தை உள்ளது. இது குறித்து அப்துல் ரகுமான் உள்ளூர் காவல்துறையினருக்கு புகார் அளித்துள்ளார். அந்தக் குழந்தையின் ரத்தம் தோய்ந்த நீரை பணிப்பெண் தவறாக செம்மண் கலந்த நீர் என சொல்லி இருக்கலாம் என கருதப்படுகிறது.
பிறந்த குழந்தையை அங்கு வந்த நோயாளிகள் யாரேனும் உள்ளே அடைத்தனரா அல்லது கழிவறையில் குழந்தையைப் பெற்ற பெண் யாராவது அந்தக் குழந்தையை குழாயில் அடைத்து விட்டு போயிருக்கலாமோ என காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இது குறித்து மருத்துவமனையின் நோயாளிகள் பதிவேட்டை காவல்துறையினர் ஆராய்ந்து வருகின்றனர்.
இந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.