மும்பை

சில தினங்களுக்கு முன் பிறந்த ஒரு ஆண் குழந்தை கர்ப்பமாகி தன் இரட்டை சகோதரனை சுமந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அறுவை சிகிச்சை மூலம் கரு நீக்கப்பட்டது.

இரட்டைக் குழந்தைகள் உருவாகும் போது ஒரே தொப்புள் கொடி இரண்டாக பிரிந்து இரு குழந்தைகளுக்கு உணவு செல்லும் பாதையாகும். அந்நேரத்தில் ஒரு கருவானது மற்றொரு கருவுடன் சேர்ந்து விடும்.  இது எப்போதாவது நடக்கும் ஒரு அபூர்வ செயலாகும்.  சில வேளைகளில் அப்படி சேரும் கரு உணவை அதிகம் உறிஞ்சுவதால் இரு குழந்தைகளும் இறக்கவும் நேரிடலாம்.

மும்பையில் தானே பகுதியில் உள்ள டைட்டன் மருத்துவமனையில் இது போன்ற ஒரு அபூர்வக் குழந்தை பிறந்துள்ளது.  அந்தக் குழந்தையின் தாய் பரிசோதனைக்கு வரும் போதே இதை மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.  தாயை ஸ்கேன் செய்து பார்க்கும் போது குழந்தையின் வயிற்றின் உள்ளே இன்னொரு கரு வளர்வது தெரிந்தது.

பிறகு குழந்தை பிறந்த 4 நாட்களில் அதன் உள்ளிருந்த கருவை அறுவை சிகிச்சை செய்து வெளியே எடுத்த மருத்துவர்கள், எடுக்கப்பட்ட கரு 7 செ மீ நீளம் இருந்ததாகவும், அதற்கு கால் கை சிறியதாக இருந்ததாகவும் தெரிவித்தனர்.  மேலும் ஒரு அதிசயம் என்னவென்றால் ஒரு சிறு தலையும், அதனுள் மூளையும் காணப்பட்ட போதிலும், அதற்கு மண்டை ஓடு வளரவில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.