கணவருடன் ஜெசிந்தாவெலிங்டன்:
நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் தான் கர்ப்பமாக இருப்பதாக சமூக ஊடகம் ஒன்றில் அறிவித்து உள்ளார். இதையடுத்து அவருக்கு வாழ்த்துகள் குவிகின்றன.
நியூசிலாந்து நாட்டின் பிரதமராக கடந்த (2016) ஆண்டு அக்டோபர் மாதம் 26-ந் தேதி பொறுப்பேற்றார் , பெண் தலைவர் ஜெசிந்தா ஆர்டர்ன். இவருக்கு வயது 37.
தொழிற்கட்சியின் தலைவரான இவர், 1856-ம் ஆண்டுக்கு பின்னர் அந்த நாட்டின் மிக இளம் வயது பிரதமர் என்ற சிறப்பை பெற்றிருக்கிறார். இவரது கணவர் கிளார்க் கே போர்டு, தொலைக்காட்சி பிரபலம் ஆவார்.
இந்த நிலையில், தான் கர்ப்பமாக இருப்பதாக சமூக ஊடகம் ஒன்றில் பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் பதிவிட்டார்.
சமூகவலைதளத்தில் “நான் பிரதமர் ஆகப்போகிறேன் என்று தெரிந்துகொண்டதற்கு ஆறு தினங்களுக்கு முன்புதான், நான் கர்ப்பம் தரித்து இருப்பது உறுதியானது. அது மிகப்பெரும் ஆச்சரியமாக அமைந்தது. நாங்கள் ஜூன் மாதம் குழந்தை பிறப்பை எதிர்பார்க்கிறோம்” என்று ஜெசிந்தா ஆர்டர்ன் குறிப்பிட்டு உள்ளார்.
இதையடுத்து அவருக்கு சமூக ஊடகங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. அந்த நாட்டின் முன்னாள் பிரதமர்கள் இருவரும் வாழ்த்துச்செய்தி வெளியிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதன்மூலம் பிரதமர் பதவியில் இருந்து பிரசவிக்க போகிற இரண்டாவது பிரதமர் என்ற பெயரையும் உலக அளவில் இவர் பெற்றிருக்கிறார் இவருக்கு முன்பாக பாகிஸ்தானில் பிரதமராக இருந்த பெனாசிர் பூட்டோ, பதவிக்காலத்தில் 1990-ல் ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.