வெலிங்டன்: தமது காதலருடன் ஓட்டலுக்கு சாப்பிட சென்ற நியூசி. பிரதமர், கொரோனா சமூக இடைவெளி காரணமாக இடம் இல்லை என்று திருப்பி அனுப்பப்பட்டார்.
மற்ற நாடுகளை போன்று நியூசிலாந்து நாட்டிலும் கொரோனா பாதிப்பு இருக்கிறது. ஆனால் இப்போது அந்நாட்டில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. மக்களின் நடமாட்டமும் அதிகரித்துள்ளது.
இந் நிலையில் அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா தனது காதலர் கிளார்க் கேபோர்டு உடன் வெலிங்டனில் உள்ள ஓட்டலுக்கு சென்றிருக்கிறார். ஆனால் அந்த ஓட்டல் நிரம்பி இருந்தது.
கொரோனா பரவல் காரணமாக கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்படுவதால் சமூக இடைவெளி அவசியம். இதை அறிந்த ஓட்டல் நிர்வாகம் பிரதமருக்கும், அவரது காதலருக்கும் உட்கார இடம் இல்லை என்று கூறியது.
இருந்தாலும் சிறிது நேரம் கழித்து இடம் கிடைக்க அவர்கள் அமர வைக்கப்பட்டனர். பிறகு அவர்கள் சாப்பிட்டு விட்டு கிளம்பி சென்றனர். ஆனால், இந்த சம்பவத்தை பற்றி அந்த ஹோட்டலில் அப்போது சாப்பிட்டுக் கொண்டிருந்த ஒருவர் டுவிட்டரில் தெரிவித்து உள்ளார்.
அதில் ஜெசிந்தா ஹோட்டலுக்கு சாப்பிட வந்தார். ஆனால் இடமில்லாத காரணத்தால் திருப்பி அனுப்பப்பட்டார் என்று கூறியிருந்தார். அந்த பதிவுக்கு அதற்கு கேபோர்ட் பதில் கொடுத்துள்ளார். அதில், இந்தக் குழப்பத்துக்கு நானே காரணம். முன்பதிவு செய்ய தவறி விட்டேன். சரியான முறையில் இதை நான் கையாளவில்லை. ஆனால் அவர்களுடன் பேசியது மகிழ்ச்சியாக இருந்தது என்று கூறியுள்ளார்.