நியூயார்க்,
அமெரிக்காவில் உள்ள நியூயார்க் மாநிலத்தில் உள்ள உலக வர்த்தக மையம் அருகே பயங்கரவாதிகள் தாக்குதல் நடைபெற்றது. இந்த தாக்குதலில் 8 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் உள்ள உலக வர்த்தக மையத்தின் அருகே உள்ள சைக்கில்கள் செல்லும் பாதையில் பயங்கரவாதி ஒருவர் வேன் மூலம் மோதி விபத்தை ஏற்படுத்தி உள்ளார்.
இந்த விபத்தில் 8 பேர் பலியாகி இருக்கலாம் என்றும், 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த பயங்கரவாதியின் விபத்து குறித்து போலீசார் கூறும்போது, வாகனம் மூலம் மோதி விபத்தை ஏற்படுத்திய பயங்கரவாதி, வாகனத்தில் இருந்து தப்பிப்பதற்காக வெளியே குதித்ததாகவும், அப்போது , “அல்லாஹூ அக்பர்” என்று சத்தமிட்டுக்கொண்டே அவர் குதித்தபோது, போலீசார் அவனை சுட்டு மடக்கியதாகவும் கூறி உள்ளனர்.
அந்த பயங்கரவாதி கையில் இரண்டு துப்பாக்கிகள் இருந்தன. ஆனால், அவை இரண்டும் போலி துப்பாக்கிகள் என தெரிய வந்ததாகவும், அவரது பெயர் சைபுலோ சைபோவ் என்பதும், அவர் உஸ்பெஸ்கிஸ்தானை சேர்ந்தவர் என்றும் விசாரணையில் தெரிய வந்ததாக கூறி உள்ளனர்.
இதுகுறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது,
“நியூயார்க் நகரத்தில் மிகவும் ஆபத்தான மனிதரால் இன்னொரு விபத்து ஏற்பட்டுள்ளது. சட்ட அமைப்புகள் இந்த விஷயத்தைக் கூர்ந்து கவனித்துவருகின்றன. இது அமெரிக்காவில் நடக்கக்கூடாது.
ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பை மீண்டும் முளைக்கவோ நம் நாட்டுக்குள் வரவோ அனுமதிக்கக்கூடாது. அவர்களை நாம் மத்திய கிழக்கில் வீழ்த்தியுள்ளோம். இதோடு போதும்.
என் எண்ணங்களும் ஆழ்ந்த இரங்கல்களும் பிரார்த்தனை களும் இந்தத் தாக்குதலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இருக்கிறது. கடவுளும் இந்த நாடும் உங்களோடு இருக்கிறார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். , “நியூயார்க் நகரத்தில் நடத்தப்பட்டுள்ள இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு கடுமையாக கண்டனத்தை பதிவு செய்கிறேன். இறந்தவர்களின் குடும்பங்களுக்காகவும், காயம் அடைந்திருப்பவர்களுக்காகவும் பிரார்த்தனை செய்கிறேன்” என்றார்.
தாக்குதல் நடத்திய நபர் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.