டில்லி,

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்திய (எஸ்பிஐ) புத்தாண்டு சலுகையாக வீடுகளுக்கான  கடன் வட்டி விகிதத்தை குறைத்துள்ளது.

நாடு முழுவதும் லட்சக்கணக்கான கிளைகளை  கொண்டுள்ள எஸ்பிஐ வங்கி, 80 லட்சம் வாடிக்கையாளர்களை வைத்துள்ளது.

மோடி அரசு அறிவித்த பண மதிப்பிழப்பு மற்றும் டிஜிட்டல் பண பரிவர்த்தனை அறிவிப்புக்கு பிறகு பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் என்ற பெயரில் ஒவ்வொரு வங்கி பரிவர்த்தனைக்கும் பணம் வசூலித்து எடுத்த நடவடிக்கை காரணமாக பொதுமக்களிடம் கடும் எதிர்ப்பை சம்பாதித்து.

இந்நிலையில், இந்த ஆண்டு  புத்தாண்டு பரிசாக கடனுக்கான வட்டி விகிதத்தை 30 புள்ளிகள் வரை குறைத்துள்ளதாக   எஸ்.பி.ஐ வங்கி  அறிவித்துள்ளது.

இதுவரை வீட்டு  கடனுக்கான வட்டி விகிதம் இதுவரை 8.95%  ஆக இருந்து வந்தது. தற்போது இதில் 30 புள்ளிகள் குறைக்கப்பட்டு  8.65% ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய வட்டி முறை நேற்று முதல் (1-ந்தேதி) நடைமுறைக்கு வரும் என எஸ்.பி.ஐ. வங்கி அறிவித்துள்ளது.

இதுகுறித்து அறிவித்துள்ள வங்கி நிர்வாகம்,  வீடு கட்ட கடன் வாங்கும் வாடிக்கையாளர்கள் அதிகரித்து உள்ள நிலையில் இந்த வட்டிக்குறைப்பு நடவடிக்கை மேற்கொண்டு இருப்பதாக கூறி உள்ளது. மேலும், தற்போதைய வட்டி குறைப்பின் காரணமாக,  பலர் தங்கள் சொந்த வீடு கனவை நிறைவேற்றிக்கொள்ள முடியும் அதே சமயம் வங்கிக்கும் நிறைய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள் என்றும் வங்கி நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், எங்களின் நேர்மையான வங்கி வாடிக்கையாளர்களுக்கு  நாங்கள் கொடுக்கும் புத்தாண்டு பரிசு இது என்றும், இதன் காரணமாக ல் 80 லட்சம் வாடிக்கையாளர்கள் பயனடைவார்கள் என்றும் தெரிவித்து உள்ளது.

அரசு விடுத்த கோரிக்கையை ஏற்று  இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருப்பதாகவும் கூறி உள்ளது.

தற்போது வீடுகளுக்கான கடன் வட்டி விகிதம் குறைக்கப்பட்ட நிலையில், வாகனங்களுக்கான கடனுக்கும் வட்டி விகிதம் விரைவில் குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மற்ற வங்கிகளுடன் ஒப்பிடுகையில் எஸ்.பி.ஐ வங்கியில் தான் கடன் வட்டி விகிதம் குறைவாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது