
சென்னை: புகழ்பெற்ற சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பேராசிரியர் எஸ்.கெளரியும், தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலையின் துணைவேந்தராக ஜி.சுகுமாரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னைப் பல்கலைக்கழகம் மற்றும் நாகப்பட்டினத்தில் இயங்கிவரும் தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கான துணைவேந்தர் பணியிடங்கள் காலியாக இருந்தன. இதைத்தொடர்ந்து, இந்தப் பணியிடங்களில் தகுதியானவர்களை நியமிக்க 2 பல்கலைகளிலும் தனித்தனியாக தேடுதல் குழுக்கள் அமைக்கப்பட்டன. அந்தக் குழு 2 பல்கலைகளுக்கும் துணைவேந்தர் பணிக்கு தகுதியானவர்கள் என தேர்வு செய்த தலா 3 பேர் கொண்ட பட்டியலை ஆளுநர் புரோகித்திடம் அளித்தது.
அந்தப் பட்டியலை பரிசீலித்த ஆளுநரும், பல்கலைகளின் வேந்தருமான பன்வாரிலால் புரோகித் சென்னை பல்கலைக்கழக துணைவேந்தராக பேராசிரியர் எஸ்.கெளரியையும், மீன்வள பல்கலைக்கழக துணை வேந்தராக ஜி.சுகுமாரையும் நியமித்து உத்தரவிட்டார்.
இதற்கான நியமன ஆணையை ராஜ்பவனில் நடந்த நிகழ்ச்சியில் ஆளுநர் வழங்கினார். இவர்களது நியமனம் அவர்கள் பொறுப்பேற்ற நாளிலிருந்து 3 ஆண்டுகள் அமலில் இருக்கும் என்று அந்த ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.