பெங்களூரு மற்றும் எர்ணாகுளம் இடையிலான புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் நவம்பர் மத்தியில் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்று ரயில்வே அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.

ஏற்கனவே இந்த வழித்தடத்தில் தற்காலிகமாக இயங்கி வந்த வாரம் மூன்று சேவை ரயில் நிறுத்தப்பட்டு ஓராண்டு ஆன நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கேரளாவைச் சேர்ந்த பாஜக தலைவர்களுடனான சந்திப்பின் போது ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

பாலக்காடு வழியாக இயக்கப்படும் இந்த அரை-அதிவேக ரயில், திருச்சூர், பாலக்காடு, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம் மற்றும் கிருஷ்ணராஜபுரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

எர்ணாகுளம் – பெங்களூரு இடையிலான பயணம் தோராயமாக ஒன்பது மணி நேரம் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கே.எஸ்.ஆர் பெங்களூரு-எர்ணாகுளம் சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் செப்டம்பர் முதல் சாதாரண எக்ஸ்பிரஸ் ரயிலாக வேகம் குறைக்கப்பட்டதால் புதிய வந்தே பாரத் ரயில் குறித்த அறிவிப்பு பெங்களூருவில் இருந்து கேரளா செல்லும் பயணிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அதேவேளையில், பெங்களூருவிலிருந்து புறப்படும் நேரத்தை மாலை 5 மணிக்குப் பிறகு நிர்ணயிக்க வேண்டும் என்று பரிந்துரைத்து வருகின்றனர்.

இருந்தபோதும் இந்த ரயிலின் நேரம், வழித்தடம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் சில வாரங்களில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கபப்டுகிறது.