பெங்களூரு:
கர்நாடக மாநிலத்தில் நிலவி வரும் அரசியலில் குழப்பம் புதிய திருப்பத்தை உருவாக்கி உள்ளது. அதிருப்தி காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு அமைச்சர் பதவி வழங்கி,ஆட்சியை தக்க வைக்கும் நோக்கில், தற்போதைய 21காங்கிரஸ் அமைச்சர்கள் கூண்டோடு தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இதை முன்னாள் முதல்வர் சித்தராமையாவும் உறுதிப்படுத்தி உள்ளார்.
கர்நாடகாவில் காங்கிரஸ், ஜனதாதளம் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆட்சிக்கு எதிராக உள்ள அதிருப்தியில் உள்ள 10 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் உள்பட 3 மதசார்பற்ற ஜனதாதளம் மற்றும் சுயேச்சை எம்எல்ஏ நாகேஷ் ஆகியோரை சேர்த்து 14 பேர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்வதாக கடிதம் கொடுத்துள்ளனர்.
இதன் காரணமாக காங்கிரஸ் ஜேடிஎஸ் கூட்டணி ஆட்சி கவிழும் சூழல் ஏற்பட்ட நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் துணைமுதல்வர் பரமேஸ்வரா வீட்டில் தீவிர ஆலோசனை மேற்கொண்டனர்.
இதையடுத்து, தற்போது அனைத்து அமைச்சர்களும் தங்களது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதல்வருமான சித்தராமையா தெரிவித்து உள்ளார்.
எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து கடிதம் கொடுத்துள்ள எம்எல்ஏக்களுக்கு அமைச்சர் பதவி வழங்கி அவர்களை திருப்திபடுத்தும் நோக்கிலும், ஆட்சியை தக்க வைக்கும் முயற்சியிலும், தற்போது பதவியில் உள்ள 21 காங்கிரஸ் அமைச்சர்களும் பதவியை ராஜினாமா செய்து இருப்பதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக குமாரசாமி கவிழ்வது தற்காலிகமாக தடுக்கப்பட்டு இருப்பதாகவும், ஆட்சி மேலும் நீடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.