சென்னை: வங்கக்கடலில் ஆந்திரா-ஒடிசா இடையே புதிய புயல் சின்னம் உருவாகி வருவதால்,  தமிழகத்தில் வரும்  29-ந்தேதி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் புதிய புயல் சின்னம் உருவாகி  உள்ளது.  இதனால் ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசா ஆகிய மாநிலங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகஅறிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் , வட ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசாவுக்கு இடையேயுள்ள வங்கக்கடலில் நேற்று நள்ளிரவு காற்றழுத்த தாழ்வு பகுதி (புயல் சின்னம்) உருவாகி உள்ளது. இது மத்திய ஆந்திராவில் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக ஆந்திரா, தெலுங்கானா, மற்றும் ஒடிசாவில் ஒருசில இடங்களில் இனிவரும் நாட்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

வட தமிழகம் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று முதல் வருகிற 29-ந்தேதி வரை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

எனவே மக்கள் வெளியில் செல்வதற்கு முன்பு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் குறிப்பிட்ட பகுதியில் கனமழையும், மற்ற பல்வேறு பகுதிகளுக்கு மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல இன்று சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

நகரின் ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்ப நிலை 36 முதல் குறைந்தபட்ச வெப்ப நிலையாக 28 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக்கூடும் என அறிவிக்கப்பட்டு உள்ளன.

மேலும் ஓரிரு இடங்களில் தரைக்காற்று மணிக்கு 40 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும், நாளையும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இன்று முதல் வருகிற 27-ந்தேதி வரை மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோர பகுதிகள் மற்றும் அதனையொட்டிய குமரிக் கடலில் மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். எனவே மீனவர்கள் இப்பகுதிகளுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வரக்கூடிய செப்டம்பர் மாதம் 28 ஆம் தேதி வரை கனமழை மற்றும் மிதமான மழை பெய்யக்கூடும்.