சென்னை: பெண் குழந்தைகளுக்காக, உதவி புரியவும் தோழி என்ற புதிய திட்டத்தை சென்னை காவல் ஆணையர் ஏகே விஸ்வநாதன் தொடங்கி வைத்துள்ளார்.
சென்னை காவலர் அலுவலகத்தில் அதற்கான நிகழ்ச்சி நடைபெற்றது. தோழி அமைப்பிற்காக செயல்பட 70 பெண் காவலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களுக்கு நிர்பயா முத்திரையும், இளம்சிவப்பு நிற ஆடையும் வழங்கப்பட்டது.
சென்னையில் உள்ள 35 அனைத்து மகளிர் காவல் நிலையங்களில் தோழி திட்டத்தின் கீழ் தலா இருவர் பணியமர்த்தப்படுவர். போக்சோ பிரிவின் கீழ் பதியப்படும் வழக்குகள், அது தொடர்பான விசாரணை, பாதிக்கப்பட்டவர்களை சந்திப்பது என்பது அவர்களின் பணியாகும்.
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறை துணை ஆணையர் ஜெயலட்சுமி, மனநல மருத்துவர் ஷாலினி, லயோலா கல்லூரியின் ஆண்ட்ரூ சேசுராஜ் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மனதளவிலும், உளவியல் மற்றும் சட்ட ரீதியாக ஆலோசனைகளை வழங்க உதவி புரியவும் தோழி என்ற இந்த புதிய திட்டத்தை செயல்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.