திருவனந்தபுரம்:
மாநில மொழியான மலையாளத்தை கற்கும் வகையிலும், மக்களின் பழக்க வழக்கங்களை கற்றுக் கொள்ளவும், புதியதாக நியமனம் செய்யப்படும் ஐபிஎஸ் அதிகாரிகள், உதவி ஆய்வாளராக காவல் நிலையத்தில் பணி புரியும் வகையில் புதிய விதிகள் கேரள மாநிலத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, இந்தியாவில் முதன்முறையாக ஐபிஎஸ் முடித்து, பதவி ஏற்க வந்த அதிகாரிக்கு, காவல் நிலை யத்தில் சப் இன்ஸ்பெக்டராக பணி வழங்கப்பட்டது. அவரும் அந்த பதவியை ஏற்று பணி புரிந்து வருகிறார்.
பொதுவாக ஐபிஎஸ் முடித்தவர்கள், நேரடியாக எஸ்.பி பணியில் நியமனம் செய்யப்படுவது வழக்கம். ஆனால், கேரளாவில், அதை மாற்றி, ஏதாவது ஒரு காவல்நிலையத்தில் குறைந்தது 6 மாதம் சப் இன்ஸ்பெக்டர் பொறுப்பில் பயிற்சி பெறவேண்டும் என புதிய விதியை கேரள டிஜிபி லோக்நாத் பெக்ரா சமீபத்தில் அறிவித்தார்.
அதன்படி, டில்லியை சேர்ந்த இளம் ஐபிஎஸ் அதிகாரி நவநீத ஷர்மா என்பவர், கேரளாவில் பணி நிமித்தம் வந்தபோது, அவருக்கு திருவனந்தபுரம் அருகே உள்ள பூவார் காவல் நிலையத்தில் எஸ்ஐ பொறுப்பு வழங்கப்பட்டது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு எஸ்.ஐ பொறுப்பேற்ற சர்மா, தற்போது மலையாளம் தெரியாமல் திண்டாடி வருவதாகவும், மலையாளத்தை எளிதில் கற்றுவிடுவேன் என்று அவர் தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.