சென்னை: கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வரவுள்ள நிலையில், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தலைமையில் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
தமிழகத்தில் கொரோனா பரவல் உச்சம்பெற்றுள்ள நிலையில், அதை கட்டுப்படுத்தும் நோக்கில், நாளை முதல் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி வணிக நிறுவனங்கள் 12 மணி வரை மட்டுமே திறக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இந்த புதிய கட்டுப்பாடுகளை சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைமுறைப்படுத்துவது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் மற்றும் அரசு உயர் அதிகாரிகள், ரிப்பன் மாளிகையில் ஆலோசனை மேற்கொண்டனர்.
இதில், காய்கறி மற்றும் மளிகை கடைகள் அரசின் அறிவுறுத்தலின்படி 12 மணிக்கு மூடப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும், அத்தியாவசியமற்ற கடைகள் திறந்து இருப்பதை அனுமதிக்கக் கூடாது எனவும் அதிகாரிகளுக்கு மாநகராட்சி ஆணையர் அறிவுறுத்தினார். மேலும், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்காதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் ஆணையர் பிரகாஷ் உத்தரவிட்டார்.
சென்னையில் காசிமேடு மற்றும் கோயம்பேடு வளாகங்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் எனவும், நாளிதழ் மற்றும் பால் வினியோகம் செய்யும் நபர்களுக்கு தடுப்பூசியை கட்டாயமாக்க வேண்டும் எனவும் சென்னை மாநகராட்சி ஆணையர் அறிவுறுத்தினார்.