லிங்காயத் மடாதிபதிகள் முதல்வர் சித்தராமையாவை சநதித்து மனு கொடுத்தபோது

பெங்களூரு:

ர்நாடகாவில் வசித்து வரும் லிங்காயத்து இன மக்கள்,   தங்களை வீர சைவர்கள் என கூறி வருகின்றனர். அவர்கள் தங்கள் சமூகத்தினரை  தனி மதமாக கர்நாடகா அரசு அங்கீகரிக்க வேண்டும் என்று போராடி வந்தனர்.

இந்நிலையில், கர்நாடக சட்டமன்ற தேர்தலை மனதில் கொண்டு, கர்நாடக அரசு, லிங்காயத்து சமூகத்தினரை தனி மதமாக அங்கீரித்து உள்ளது.

மேலும், லிங்காயத் பிரிவினரை தனி மதமாக அறிவிக்கக்கோரி மத்திய அரசுக்கும் பரிந்துரை செய்துள்ளது.

கர்நாடகாவில் வசித்து வரும் ஒரு பிரிவினரான  லிங்காயத்துகள் எனப்படும் சமூகத்தினர், தாங்கள் இந்துக்கள் அல்ல என்றும்,  வீர சைவர்கள் என்றும், தங்களின் பிரதான கடவுள் சிவன் என்றும் கூறி வருகின்றனர்.

சிவனின் அடையாளமான லிங்கத்தை மட்டுமே கடவுளாக வழிப்பட்டு வரும் இவர்கள், தங்களை  தனி மதமாக அங்கீகரிக்க வலியுறுத்தி தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர்.

அவர்களின் கோரிக்கை குறித்து, குழு அமைத்து பரிந்துரை செய்து வந்த கர்நாடக அரசு, குழுவின் பரிந்துரையை ஏற்றது. மேலும், நேற்று  லிங்காயத்து சமூக மடாதிபதிகளை சந்தித்து பேசிய முதல்வர் சித்தராமையா, இன்று அமைச்சரவை கூட்டத்தில் விவாதித்து, லிங்காயத்துக்களை புதிய மதமாக அங்கீரித்து உள்ளதாக தெரிவித்துள்ளார்.

லிங்காயத்துக்களை  12 வது நூற்றாண்டில் வாழ்ந்த பசவர் என்பவர் தோற்றுவித்துள்ளதாக கூறப்படுகிறது.

கர்நாடக அரசின் இந்த புதிய அதிரடி அறிவிப்பு காரணமாக பாஜக உள்பட எதிர்க்கட்சியினர் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளனர்.