புதுடெல்லி: கொரோனா பரவல் இன்னும் கட்டுக்குள் வராத நிலையில், இந்தியாவிற்கு வரும் மற்றும் இந்தியாவிலிருந்து செல்லக்கூடிய விமானப் போக்குவரத்து விபரங்கள் குறித்த சமீபத்திய தகவல்களை அறிந்து கொள்வோம்.

தற்போதைய நிலையில், அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, அமீரகம், கத்தார் மற்றும் மாலத்தீவுகள் ஆகிய நாடுகளுடன் இந்திய அரசாங்கம் சிறப்பு ஒப்பந்தங்களை மேற்கொண்டு, இந்தியா மற்றும் அந்நாடுகளுக்கு இடையில் விதிமுறைகளுக்கு உட்பட்டு விமானப் போக்குவரத்து தொடங்கி நடைபெற்று வருகிறது.

இவைதவிர, மேலும் 13 நாடுகளுடன், விதிமுறைகளுக்குட்பட்ட விமானப் போக்குவரத்து நடத்துவதற்கான ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

ஆஸ்திரேலியா, இத்தாலி, ஜப்பான், நியூசிலாந்து, நைஜீரியா, பஹ்ரைன், இஸ்ரேல், ‍கென்யா, பிலிப்பைன்ஸ், ரஷ்யா, சிங்கப்பூர், தென்கொரியா மற்றும் தாய்லாந்து ஆகியவைதான் அந்த 13 நாடுகள்.

எந்தவகை செல்லத்தக்க விசா வைத்துள்ள இந்தியர்களும், தற்போதைய நிலையில் பிரிட்டன், அமெரிக்கா, கனடா, அமீரகம், ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளலாம் என்று விமானப் போக்குவரத்து இயக்குநரகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்பெல்லாம் வெளிநாட்டிலிருந்து இந்தியா வருவோருக்கு, 7 நாள் வீட்டு தனிமைப்படுத்தல் மற்றும் 7 நாள் நிறுவன தனிமைப்படுத்தல் என்ற விதிமுறைகள் இருந்தன. ஆனால், ஆகஸ்ட் 8ம் தேதிக்குப் பிறகான நிலவரப்படி, பயணத்திற்கு 96 மணிநேரங்களுக்கு முன் பரிசோதனை செய்து நெகடிவ் முடிவு வந்திருந்தால், சம்பந்தப்பட்டவர் இந்தியாவில் நிறுவன தனிமைப்படுத்தலில் பங்கேற்க வேண்டியதில்லை.