சென்னை: புதிய ரேஷன் கார்டு விண்ணப்பித்துள்ளவர்களில் 50ஆயிரம் பேருக்கு விரைவில் ரேசன் கார்டு வழங்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்து உள்ளார்.
தமிழ்நாடு முழுவதும், புதிய ரேஷன் கார்டு கேட்டு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ள நிலையில், முதல்கட்டமாக 50 ஆயிரம் பேருக்கு விரைவில் புதிய ரேஷன் கார்டுகள் விநியோகிக்கப்பட உள்ளன. மற்ற விண்ணப்பங்கள் பகுதி பகுதியாக சரிபார்க்கப்பட்டு ஒப்புதல் கொடுக்கப்பட உள்ளன என அமைச்சர் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் ரேஷன் கார்டு இருந்தால் மட்டுமே பொங்கல் பரிசு, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை, முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட அரசின் சமூக பாதுகாப்பு திட்டங்களில் பயனாளியாக சேர முடியும். தற்போதைய நிலையில் 2 கோடிக்கும் அதிகமான குடும்ப அட்டைகள் புழக்கத்தில் உள்ளன. அந்த அட்டைகளுக்கு 34 ஆயிரத்து 850 ரேஷன் கடைகள் மூலம் மாதந்தோறும் மலிவு விலையில் அரிசி, கோதுமை உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்படுகின்றன.
திண்டுக்கல்லில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் சக்கரபாணி புதிய ரேஷன் கார்டுகள் விரைவாக கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவித்தார். அனைத்து ஆவணங்களும் சரியாக இருந்தால், 15 நாட்களுக்குள் புதிய ரேஷன் கார்டு கொடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
புதிய ரேஷன் கார்டு கேட்டு ஒரு லட்சத்து 7 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளதாகவும், அந்த விண்ணப்பங்கள் தீவிரமாக பரிசீலனை செய்யப்பட்டு வருவதாகவும், விரைவில் 55 ஆயிரம் பேருக்கு புதிய ரேஷன் கார்டு கொடுக்கப்பட உள்ளதாக கூறியவர், தமிழ்நாட்டில் குடும்ப அட்டை கோரி பெறப்படும் விண்ணப்பங்களில் தகுதியான நபர்களுக்கு 15 நாட்களில் குடும்ப அட்டை வழங்கப்படுகிறது என்றவர், அந்த வகையில் தமிழ்நாட்டில் இதுவரை 21 இலட்சம் புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன என கூறினார்.
மேலும், தமிழ்நாட்டை குடிசைகள் இல்லாத மாநிலமாக உருவாக்க கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தை செயல்படுத்தி வருகிறார் என்றார். தமிழ்நாட்டில் 8 இலட்சம் வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டு, 2 இலட்சம் வீடுகள் கட்டுவதற்கு ஆணை வழங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன என்றும் அமைச்சர் சக்கரபாணி கூறினார்.
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வேண்டி ”உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமில் வழங்கப்பட்ட மனுக்களில் தகுதியான நபர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் 12.12.2025-அன்று கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் நிழச்சி நடைபெறவுள்ளது. முதலமைச்சர் இந்தியாவில் எங்கும் செயல்படுத்தப்படாத “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமை தொடங்கி வைத்தார்கள். மொத்தம் 10,000 முகாம்கள் நடத்தப்பட்டதில், 29 இலட்சம் மனுக்கள் பெறப்பட்டுள்ளன. அந்த விண்ணப்பங்களில் தகுதியானவர்களுக்கு கட்டாயம் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி கூறினார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் சக்கரபாணி அரசின் திட்டங்களை பட்டியலிட்டார். அவர் பேசும்போது, ” முதலமைச்சர் அவர்கள் ஆட்சிப்பொறுப்பேற்ற அன்றைய தினமே நகரப் பேருந்துகளில் பெண்கள் கட்டணமில்லா பயணம் மேற்கொள்ளும் விடியல் பயணத் திட்டத்தை செயல்படுத்தினார்கள். மேலும், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு காலை உணவுத் திட்டம், அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் (தமிழ் வழிக்கல்வி) படித்து உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ‘புதுமைப்பெண்’ திட்டம் மற்றும் ”தமிழ்ப்புதல்வன்” திட்டம் செயல்படுத்தப்படுகின்றன.
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் இல்லத்திற்கே சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேசன் பொருட்களை விநியோகம் செய்யும் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம், ஒரு குடும்பத்தில் பெற்றோரை இழந்த எத்தனை குழந்தைகள் இருந்தாலும் அவர்களுக்கு 18 வயது வரையிலான பள்ளிப் படிப்பு முடியும் வரை இடைநிற்றல் இன்றி கல்வியை தொடர மாதம் ரூ.2,000 உதவித்தொகை வழங்கிடும் “அன்புக்கரங்கள்” திட்டம், விபத்திற்கு உள்ளான நபர்களை அரசு அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனைகளில் சேர்த்து சிகிச்சை பெற்றால் முதல் 48 மணி நேரத்திற்கு மருத்துவ செலவுத் தொகையாக ரூ.2.00 இலட்சம் வழங்கப்படும் ”நம்மைக் காக்கும் 48” திட்டம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தியுள்ளார்கள்” என்று அமைச்சர் சக்கரபாணி கூறினார்.