சென்னை: பல்லாவரத்தில் விரைவில் புதிய மின் கோட்டம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் உறுப்பினரின் கேள்விக்கு பதில் கூறிய அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை மானிய கோரிக்கை விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இன்று சட்டப்பேரவையில், இந்து சமய அறநிலையத்துறை, தகவல் தொழில் நுட்பத்துறைகளின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. முன்னதாக கேள்வி நேரத்தின்போது உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்தனர்.
அப்போது,பல்லாவரம் தொகுதி ம்.எல்.ஏ கருணாநிதி, பல்லாவரம் தொகுதி அஸ்தினாபுரம் பகுதியில், துணை மின்நிலையம் அமைக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
இதற்கு பதிலளித்து பேசிய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, 2022-2023-ஆம் நிதியாண்டில் மாநிலம் முழுவதும் 100 புதிய துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளதாகவும், பல்லாவரம் தொகுதி அஸ்தினாபுரம் பகுதியில் 33 KV புதிய துணை மின் நிலையம் அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணிகள் முடிந்த வுடன், மின் நிலையம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கும் என்றும், கடந்த ஓராண்டில் 47 புதிய துணை மின் நிலையங்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், 6.65 லட்சம் மின் நுகர்வோரைக் கொண்ட தாம்பரம் கோட்டம், இரண்டாக பிரிக்கப்பட்டு பல்லாவரம் மின் கோட்டம் விரைவில் உருவாக்கப் படும் என்றும், அதை முதலமைச்சர் தொடங்கி வைப்பார்.
இவ்வாறு கூறினார்.