சென்னை: வேளச்சேரியில் அமைக்கப்பட்டு வரும் நன்னீர் குளத்தால் அப்பகுதி  மக்களுக்கு நல்ல தீர்வு கிடைக்கும் என  அமைச்சர் மா.சுப்பிரமணியன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சென்னையில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.  மேற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக  தென்மேற்குவங்கக் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும், அதுபோல, தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதையொட்டிய லட்சத்தீவுப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக  அடுத்த 5 நாட்கள் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும்,  வரும் 13, 14-ம் தேதிகளில் சென்னை உள்பட பெரும்பாலான இடங்களிலும் இடி,மின்னலுடன் கூடிய கழை பெய்யக்கூடும் என்று எச்சரித்துள்ளது.

இதையடுத்து சென்னையில்  மழை முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாக மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில்,  தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்  இன்று காலை,  அடையாறு மண்டலம், வேளச்சேரி எம்.ஆர்.டி.எஸ். அருகில் உள்ள இரயில்வே சாலை வடக்குப் பகுதியில் வெள்ளப் பாதிப்பைத் தடுத்திடும் வகையில் வெட்டப்பட்டுள்ள குளத்தினைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, மேயர்  ஆர். பிரியா, தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், திரு.வி.க. நகர் சட்டமன்ற உறுப்பினர்  தாயகம் கவி, ஆணையாளர் ஜெ.குமரகுருபரன், இ.ஆ.ப., துணை ஆணையாளர் (பணிகள்) , வி.சிவகிருஷ்ணமூர்த்தி, இ.ஆ.ப., தெற்கு வட்டார துணை ஆணையாளர்  எம்.பி.அமித், இ.ஆ.ப., மண்டலக்குழுத் தலைவர்   துரைராஜ், மாமன்ற உறுப்பினர்கள்  வே. ஆனந்தம், பெ. மணிமாறன், எஸ். பாஸ்கரன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

பின்னர் செய்தியளார்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்,  வேளச்சேரி பகுதி வெள்ளச்சேரியாக இருந்தது.  தற்போது, அரசு நன்னீர் குளம் அமைப்பதன் மூலம் வேளச்சேரிக்கு நல்ல தீர்வு கிடைத்துள்ளது. இந்த நன்னீர் குளமானது,   3800 சதுர மீட்டர் அகலத்திற்கு உருவாக்கப்பட்டு உள்ளது என்றும் தெரிவித்தார்.