லக்னோ:

சமாஜ்வாடி கட்சியில் இருந்து விலகி முலாயம் சிங் தலைமையில் புதிய கட்சியை தொடங்க போவதாக உ.பி முன்னாள் அமைச்சர் ஷிவ்பால் யாதவ் அறிவித்துள்ளார்.

‘‘புதிய கட்சி மதச்சார்பற்ற சமாஜ்வாடி மோர்ச்சா என அழைக்கப்படும். இந்த கட்சியின் தேசிய தலைவராக முலாயம் சிங் யாதவ் இருப்பார்” என்று ஷிவ்பால் யாதவ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

உ.பி. சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு சமாஜ்வாடி கட்சிக்குள் கடந்த ஒரு ஆண்டாக நிலவி வந்த உட்கட்சி பூசல் பூதாகரமாக வெடித்தது. கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் தேசியத் தலைவராக அகிலேஷ் யாதவ் தேர்ந்தெடுக்கப்பட்டார். இது செல்லாது என முலாயம் அறிவித்தார். பின்னர் கட்சி மற்றும் சின்னம் யாருக்கு சொந்தம் என்று தேர்தல் ஆணையத்திடம் சென்றனர். இதுகுறித்து விசாரணை நடத்திய தேர்தல் ஆணையம், அகிலேஷ் யாதவ் தலைமை வகிக்கும் குழுவே உண்மையான சமாஜ்வாடி கட்சி என்றும் அவர்களுக்கே சமாஜ்வாடி கட்சியின் பெயர் மற்றும் அக்கட்சியின் சைக்கிள் சின்னம் சொந்தம் எனவும் அறிவித்தது.

கடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து களம் கண்ட சமாஜ்வாடி படுதோல்வி அடைந்தது. இதன் பின்னர் மீண்டும் பூசல் ஏற்பட்டது. கட்சியின் கட்டுப்பாட்டை 3 மாதங்களுக்குள் முலாயம் சிங்கிடம் அகிலேஷ் யாதவ் ஒப்படைக்காவிட்டால், புதிய மதச்சார்பற்ற முன்னணி தொடங்கப்படும் என்று ஷிவ்பால் யாதவ் சமீபத்தில் அறிவித்தார்.

இதன்படி புதிய கட்சி தொடங்குவதாக அறிவித்தார். புதிய கட்சியான சமாஜ்வாடி மதச்சார்பற்ற மோர்ச்சா சமாஜ்வாடி கட்சியை எதிர்த்து தேர்தலில் போட்டியிடுமா? என்பதற்கு அவர் தெளிவாக கூறவில்லை.