டில்லி

டில்லியில் கட்டப்பட்டு வரும் புதிய நாடாளுமன்ற கட்டிடம் அரசியலமைப்பு சட்ட தினமான நவம்பர் 26 அன்று திறக்கப்படலாம் எனத் தெரிய வந்துள்ளது.

மத்திய அரசு 2022-ம் ஆண்டு நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர், புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நடைபெறும், என தெரிவித்து வருகிறது.  எனவே இதற்கான கட்டுமானத்தை இந்தாண்டு அக்டோபர் இறுதியில் முடிக்க வேண்டும் என, ஒப்பந்தக்காரர்களுக்குக் காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது.  ஒவ்வொரு வாரமும் இத்திட்டப் பணிகளின் முன்னேற்றம், ஒப்பந்தக்காரர்கள் மற்றும் வடிவமைப்பாளர்களுடன் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

மேலும் இருக்கைகள், மேசைகள் எல்லாம் வெவ்வேறு இடங்களில் தயாராகி வருகின்றன.  இந்த பணிகளை முடிப்பதில் உள்ள சிரமத்தைப் போக்க, சிறிய அளவிலான ஆலோசனைக் கூட்டங்களும் நடக்கின்றன. இந்த பெரிய திட்டத்தைக் குறுகிய காலத்தில், புதிய மாற்றங்களுடன் முடிப்பது மிகவும் கடினமான பணி என அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அரசு வட்டாரங்கள் அரசியலமைப்பு சட்ட தினமான நவம்பர் 26-ம் தேதி முதல், புதிய நாடாளுமன்ற கட்டிடம் செயல்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகத் தெரிவித்துள்ளன.இதில் அமைச்சர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களுக்கு, மிகப்பெரிய அலுவலகங்கள், கூட்ட அரங்குகள், உணவு கூடங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.