சென்னை: தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் தனது குடியிருப்பு வளாகங்களில் வசித்து வந்தும், நீண்ட காலமாக வாடகை செலுத்தாதவர்களின் பெயர்களை அறிவிப்புப் பலகையில் வெளியிட்டுள்ளது.
சென்னையிலுள்ள பீட்டர்ஸ் காலனியில் இரண்டு நாட்களுக்கு முன் ரூ. 35.18 இலட்சம் வாடகை பாக்கி வைத்துள்ள 34 நபர்களின் பெயர்களை பார்வைக்கு வைத்துள்ளது. மேலே குறிப்பிடப்பட்டுள்ளத் தொகையானது இரண்டு வருட வாடகை பாக்கியாகும்.
இது குறித்து, தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய அதிகாரிகள் பேசும்பொழுது, “கடந்த காலத்தில் வாடகை வசூலிப்பதற்காக பலதரப்பட்ட முயற்சிகள் மேற்கொண்டோம் ஆனால், அவை பலனளிக்காததால் இந்நடவடிக்கையில் இறங்கினோம்“ என்றார்கள்.
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், அரசு ஊழியர்களுக்கென 17 குடியிருப்புத் திட்டங்களைக் கொண்டுள்ளது. அவற்றில், 10 சதவீதம் பொதுமக்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
அதிகாரப்பூர்வமான தகவலின்படி, மொத்தம் 500 வீடுகள் பொதுமக்களுக்கென உள்ளன. அவற்றில் பெரும்பான்மையான எண்ணிக்கையாக 180 வீடுகள் லாயிட்ஸ் ரோடு குடியிருப்பிலும், அதைத் தொடர்ந்து பீட்டர்ஸ் காலனியில் 100 வீடுகளும் ஏனையவை அண்ணாநகர் மற்றும் நகரின் மற்ற பகுதிகளிலும் அமைந்துள்ளன.