சென்னை: தமிழகத்தில் 7 மாதங்களுக்கு பிறகு, நாளை தியேட்டர்கள் திறக்கப்பட உள்ள நிலையில், விபிஎஃப் கட்டணத்தை ரத்து செய்யாதவரை புதியப்படங்கள் வெளியிடப்படாது என தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்து உள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக தியேட்டர்கள் கடந்த மார்ச் மாதம் மூடப்பட்டன. இந்நிலையில் சுமார் 7 மாதங்களுக்கு பிறகு நாளை (10-ந்தேதி) தியேட்டர்களை திறக்க தமிழ்கஅரசு அனுமதி வழங்கியுள்ளது. அத்துடன் கொரோனா நெறிமுறைகளுடன் 50 இருக்கைகளுடன் இயக்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது. இது தியேட்டர் அதிபர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருந்தாலும், புதியப்படங்கள் திரையிடுவதில் சிக்கல் எழுந்துள்ளது.
கொரோனா தொற்று பொதுமுடக்கம் காரணமாக, திரைப்படத் தயாரிப்பு தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், வி.பி.எப். கட்டணம் ரத்து செய்ய வேண்டும் என தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் கோரிக்கை வைத்தது. ஆனால் ஏற்க மறுத்த தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் திருப்பூர் சுப்பிரமணியம், ஸ்ரீதர் ஆகியோர், “அரசு உத்தரவுப்படி நாளை தியேட்டர்கள் திறக்கப்படும். தியேட்டர் அதிபர்கள் புதிய படங்களை கொடுக்காவிட்டால் வெற்றி பெற்ற பழைய படங்களை திரையிடுவோம்” என்றனர்.
விபிஎஃப் கட்டணம் தொடர்ந்பாக தியேட்டர் அதிபர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் இன்னும் சமரசம் ஏற்படவில்லை.
இந்த நிலையில், இன்று தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில், அதன் தலைவர் பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிவிப்பில், விபிஎஃப் சம்பந்தமாக அனைதது தரப்புகளின் நிலைப்பாட்டின் காரணமாக புது திரைப்படங்கள் வெளியிடுவதில் சிக்கல் நீடித்து வருவதாகவும், இதில் நலல தீர்வு கிடைக்கும்வரை புதுப்படங்களை வெளியிட முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என தெரிவித்து உள்ளார்.