சென்னை: வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. புயலாக மாறும் வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை மறுநாள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். 48 மணி நேரத்தில் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் புதிய புயல் சின்னமாக வலுப்பெறும்.

 இந்த தாழ்வு பகுதி வலுவடைந்து மேற்கு, வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து அக்டோபர் 22ஆம் தேதி தாழ்வு மண்டலமாக வலுவடையக்கூடும் என்றும், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து புயலாக மாறி வங்க கடலில் மத்திய, மேற்கு பகுதியில் நிலை கொள்ளும் என்றும் வானிலை மையம் அறிவித்திருக்கிறது. அந்தமானையும், அதனை ஒட்டிய பகுதிகளிலும் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழ்நாடு , புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இன்று முதல் 23ஆம் தேதி வரை 4 நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய லேசான மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.

இந்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றவுடன், தாய்லாந்தால் பெயரிடப்பட்ட சிட்ராங் என்று அழைக்கப்படும். மே மாத தொடக்கத்தில் வங்கக் கடலில் உருவான அசானி புயலுக்குப் பிறகு இந்த ஆண்டு சிட்ராங் புயல் உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.  தீபாவளி நாளில் மழை சிட்ராங் என பெயரிடப்பட்ட இந்த புயல் பெரும்பாலும் மேற்கு நோக்கி நகர்ந்து இந்தியாவின் கிழக்குக் கடற்கரையை நெருங்கி வட தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெற்கு ஒடிசாவில் உள்ள பகுதிகளை பாதிக்க வாய்ப்பு உள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடும் நாளில் வங்கக் கடலில் புயல் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.