டில்லி
வரும் அக்டோபர் 1 முதல் பல மாற்றங்களுடன் அமலாக உள்ள புதிய தொழிலாளர் சட்டம் குறித்து இங்குக் காண்போம்.

மத்திய பாஜக அரசு தொழிலாளர் சட்டங்களை மாற்றி அமைத்து புதிய தொழிலாளர் சட்டத்தை உருவாக்கி உள்ளது. புதிய தொழிலாளர் சட்டத்தில் ஏற்கனவே உள்ள விதிகளில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த புதிய சட்டம் அக்டோபர் 1 முதல் அமலாக உள்ளது. இதில் காணப்படும் முக்கிய மாற்றங்கள் குறித்து இங்கு காண்போம்.
இதில் தொழிலாளர்கள் பணி நேரம் மாற்றப்பட உள்ளது. புதிய சட்டப்படி தொழிலாளர்கள் பணி புரியும் நேரம் 9 மணி நேரத்தில் இருந்து 12 மணி நேரம் வரை அதிகரிக்க உள்ளது. இந்த மாற்றம் தொழிலாளர்களுக்கு வேலைப் பளுவை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
அத்துடன் ஊதியமும் மாற்றி அமைக்கப்பட உள்ளது. ஒரு தொழிலாளர் பெறும் மொத்த ஊதியம் குறைக்கப்படவில்லை எனினும் அதில் அடிப்படை சம்பளம் உயர்த்தப்பட்டு படிகள் குறைக்கப்படுகின்றன. அதாவது ஒரு தொழிலாளியின் மாதச் சம்பளத்தில் 50% அல்லது அதற்கு மேல் அடிப்படை சம்பளமாக இருக்க வேண்டும் என சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அடிப்படை சம்பள உயர்வால் பிராவிடண்ட் ஃபண்ட் தொகை அதிகரிக்கும். இதனால் ஒரு தொழிலாளியின் கைக்கு வரும் ஊதியம் குறையும். அதே வேளையில் ஓய்வுக்குப் பிறகு கிடைக்கும் பணம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. தொழிலாளர்களுக்கு கிராசுடி தொகை அதிகரிக்கும் என்பதால் நிறுவனத்துக்குச் செலவுகள் அதிகரிக்கும்.
அதைப் போல் அதிக பட்ச பணி நேரம் 12 மணியாக அதிகரிக்கப்படுவதில் ஒரு சில விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதாவது முந்தைய விதிகளின்படி 15 முதல் 30 நிமிடங்கள் அதிக நேரம் பணி புரிந்தால் அது 30 நிமிட ஓவர் டைமாக கணக்கிடப்படும்.
ஆனால் புதிய விதிகளின் படி 30 நிமிடங்களுக்குட்பட்ட நேரத்துக்கு அதிகப் பணி ஓவர் டைமாக கணக்கிடப்படாது. 30 நிமிடங்களுக்கு மேல் பணி புரிந்தால் அது ஒரு மணி நேர ஓவர் டைம் எனக் கருதப்படும்.
மேலும் எந்த ஒரு தொழிலாளியும் 5 மணி நேரம் தொடர்ந்து பணி புரியக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 5 மணி நேரம் பணி புரிந்தால் அரை மணி நேரம் ஓய்வு அளிக்கப்பட்டு அதன் பிறகே பணி புரிய அனுமதிக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.