புதுடெல்லி: கடைகள் மற்றும் நிறுவன சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்ட சிறிய கடைகள், சில விதிமுறைகளுடன் செயல்படலாம் என்று தெரிவித்துள்ளது மத்திய உள்துறை அமைச்சகம்.
இந்தியாவில், இதுவரை 23 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 700க்கும் மேலானவர்கள் உயிரிழந்திருக்கின்றனர். இந்நிலையில், அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடாது என்ற நிலையில் 50% அளவில் சில்லறை விற்பனைக் கடைகளை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது; சந்தை வளாகங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் உள்ள கடைகள் இயங்குவதற்கு அனுமதிக்கப்படும்.
ஆனால், வணிக வளாகங்கள் மற்றும் கொரோனா பரவலின் தாக்கம் தீவிரமாக இருக்கும் பகுதிகளில் கடைகள் செயல்பட அனுமதியில்லை.
மாநகராட்சி மற்றும் நகராட்சிப் பகுதிகளை தவிர்த்து மற்ற இடங்களில் உள்ள கடைகளைத் திறந்து கொள்ளலாம். மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள கடைகள் மற்றும் நிறுவன சட்டத்தின் கீழ் என அனைத்தும் 50% ஊழியர்களுடன் இயங்கலாம். இந்த இடங்களில் சமூக விலகல் மற்றும் முகக்கவசம் அணிவது கட்டாயம்.
குடியிருப்பு பகுதிகளில் உள்ள கடைகள் மற்றும் சந்தை வளாகங்களில் உள்ள கடைகள் இயங்குவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. ஆனால், மல்டி பிராண்ட் மற்றும் ஒற்றை பிராண்ட் மால்கள் திறக்க அனுமதியில்லை என்று கூறப்பட்டுள்ளது.
இந்தப் புதிய உத்தரவின்படி, எந்தெந்த கடைகள் திறக்கப்படலாம்:
* மாநகராட்சி மற்றும் நகராட்சிகளுக்கு வெளியே செயல்படும் கடைகள், குடியிருப்பு பகுதிகள் மற்றும் சந்தை வளாகங்களில் உள்ள கடைகள் உட்பட அந்தந்த மாநில, யூனியன் பிரதேசத்தில் உள்ள கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்ட கடைகளை திறக்கலாம்.
* குடியிருப்பு பகுதிகள் மற்றும் அதன் அருகில் உள்ள சந்தைகளில் உள்ள அனைத்துக் கடைகளையும் திறக்கலாம்.
* கிராமப்புறங்களில், பதிவு செய்யப்பட்ட அனைத்து கடைகளும் சந்தைகளும் திறக்கலாம். நகரங்களில் குடியிருப்பு பகுதிகளில் உள்ள கடைகள் மற்றும் தனித்து செயல்படும் கடைகளை மட்டும் திறக்கலாம்
* சலூன்கள் திறக்கலாம். ஆனால், அவை வணிக வளாகத்தில் இருந்தால் இயங்க அனுமதியில்லை.
* வணிக வளாகங்களில் இல்லாமல், தனி கட்டடத்தில் செயல்படும் தையல் கடைகளை திறக்கலாம்.
* மாநகராட்சி மற்றும் நகராட்சிகளுக்கு வெளியே பதிவு செய்யப்பட்ட சந்தைகளில் உள்ள கடைகள் 50% ஊழியர்களுடன் செயல்படலாம்.
* நகர்ப்புறங்களில் அத்தியாவசியமற்ற பொருட்கள் மற்றும் சேவைகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனினும், குடியிருப்புப் பகுதிகள் அல்லது தனி கட்டடத்தில் இயங்கும் கடையாக இருக்க வேண்டும்.
* மாநகராட்சி மற்றும் நகராட்சி எல்லைக்கு உட்பட்டவை தவிர்த்து, பிற வணிக வளாகங்களைத் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.