சென்னை

சென்னை – சேலம் தேசிய பசுமை நெடுஞ்சாலைக்கான நிலம் கையகப்படுத்தும் பணியை தொடங்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு தேசிய நெடுஞ்சாலைத் துரை ஆணையம் கோரிக்கை விடுத்துள்ளது.

சென்னையில் இருந்து சேலம் செல்லும் வகையில் தேசிய பசுமை நெடுஞ்சாலைக்கான வழித்தட வரைபடத்தை தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையம் வெளியிட்டுள்ளது.   சுமார் 274 கிமீ தொலைவில் அமைய உள்ள இந்த நெடுஞ்சாலை சுமார் 250 கிமீ வனப்பகுதியில் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நெடுஞ்சாலை தாம்பரம் முதல் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஆரூர்  வரை உள்ள பகுதிக்கு நெடுஞ்சாலை 179 பி எனவும் அரூர் முதல் சேலம் வரை உள்ள சாலைக்கு 179 ஏ எனவும் பெயரிடப்பட்டுள்ளது.    இந்த சாலை காஞ்சிபுரம் மாவட்டம், திருவண்ணாமலை மாவட்டம், கிருஷ்ணகிரி மாவட்டம், தருமபுரி மாவட்டம், சேலம் மாவட்டம் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியதாக அமையும்.

இந்த சாலை அமைக்கப்பட்டால் சுமார் மூன்று மணி நேரத்தில் சென்னையில் இருந்து சேலம் செல்லலாம் என கூறப்படுகிறது.    இந்தியாவிலேயே இது போல பசுமை நெடுஞ்சாலைகளில் இது இரண்டாவதாக அமைய உள்ளது.   இந்த சாலைக்கான நிலங்களை கையகப்படுத்தும் பணிகளை தொடங்க தமிழக அரசை நெடுஞ்சாலைத் துறை கேட்டுக் கொண்டுள்ளது.