மும்பை: இந்திய அணி வீரர்களின் உடல்தகுதியை இன்னும் மேம்படுத்த, புதியமுறையிலான பயிற்சி நடைமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது பிசிசிஐ அமைப்பு.
இதன்படி, 2 கி.மீ. தூரத்தைக் கடப்பதற்கான நேரஅளவு நிர்ணயிக்கப்பட்டு, அதன்படி பயிற்சிசெய்து தகுதிபெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், இந்திய வீரர்களின் உடல்தகுதி திறனை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்திச் செல்ல முடியும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்தப் புதிய விதிமுறையின்படி, 2 கி.மீ. தூரத்தை, வேகப்பந்து வீச்சாளர்கள் 8 நிமிடங்கள் 15 நொடிகளில் கடக்க வேண்டும்.
அதேசமயம், பேட்ஸ்மென்கள், விக்கெட் கீப்பர்கள் மற்றும் சுழற்பந்து வீச்சாளர்கள், அந்த தூரத்தை 8 நிமிடங்கள் மற்றும் 30 நொடிகளில் கடக்க வேண்டும்.
பொதுவாக, புகழ்பெற்ற தடகள வீரர்கள், அந்த தூரத்தை 6 நிமிடங்களில் கடப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், கத்துக்குட்டி வீரர்கள் அந்த தூரத்தைக் கடக்க 15 நிமிடங்கள் எடுத்துக் கொள்வார்கள்.
இந்த ஆண்டில், இந்திய மண்ணில் நடைபெறவுள்ள டி-20 உலகக்கோப்பைத் தொடருக்கு தகுதிபெறுவதற்கான ஒரு நடைமுறையாக இது பின்பற்றப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.