சென்னை: தாம்பரம் சானிட்டோரியத்தில் அமைந்த சித்த மருத்துவ ஆராய்ச்சி மைய மருத்துவமனையில், புற நோயாளிகளின் வசதிக்காக கட்டணம் செலுத்தி கூடுதல் மருந்துகளைப் பெறும் வசதி தொடங்கப்பட்டுள்ளது.
தாம்பரம் சானிட்டோரியத்தில் அமைந்த தேசிய சித்த மருத்துவ ஆராய்ச்சி மையம், அகில இந்திய அளவில் ‘ஆயுஷ்’ மருத்துவத்தை ஊக்குவிக்கும் 7 கல்வி நிறுவனங்களில் இதுவும் ஒன்று.
இங்கே, புறநோயாளிகள் பிரிவும் மொத்தம் 10 கவுன்டர்களைக் கொண்டு செயல்பட்டு வருகிறது. புறநோயாளிகளாக ஒரு நாளைக்கு சுமார் 2000 பேர் வரை வந்து செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு நோயாளிக்கும் 5 நாட்களுக்கு மட்டுமே மருந்துகள் வழங்கப்பட்டு வந்ததால், தூரத்திலிருந்து வரும் நோயாளிகள் அவதியுற்றனர். இதனால், கூடுதலாக மருந்துகளை வழங்க வேண்டுமென்ற கோரிக்கைகள் எழுந்தன.
இதனையடுத்து, கட்டணம் செலுத்தி கூடுதல் மருந்துகளைப் பெற்றுக்கொள்ளும் வசதி புதிதாக துவக்கப்பட்டுள்ளது. இதன்படி, காலை 8 மணிமுதல் மதியம் 12 மணிவரை கட்டணம் செலுத்தி, 10 நாட்கள் வரை கூடுதல் மருந்துகளைப் பெற்றுக்கொள்ளலாம். அங்கே, மருத்துவ ஆலோசனைகளை வழங்குவதற்கென மருத்துவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.