புதுடெல்லி: நாடு முழுமைக்கும் ஒருங்கிணைந்த ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவு விதிமுறைகளை வெளியிட்டுள்ளது இந்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம்.
இந்தப் புதிய விதிமுறைகள் வரும் அக்டோபர் மாதம் 1ம் தேதியிலிருந்து அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கூறப்பட்டுள்ளதாவது; இந்தப் புதிய விதிமுறைகளின்கீழ், நாட்டினுடைய அனைத்து மாநிலங்களின் ஓட்டுநர் உரிமங்கள் மற்றும் வாகனப் பதிவு அட்டைகள் ஒரேமாதிரியான தோற்றத்தைக் கொண்டிருக்கும் மற்றும் அதில் QR குறியீடும் இடம்பெற்றிருக்கும்.
இந்தக் குறியீட்டின் மூலம், 10 ஆண்டுகள் வரையான ஓட்டுநர் தொடர்பான தரவுகள் மற்றும் அபராத விபரங்களை பதிவுசெய்து வைத்துக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. ஓட்டுநர் உரிமத்தின் பின்பக்கம், அவசரகால தொடர்பு எண் இடம்பெற்றிருக்கும்.
அனைத்து வாகனங்கள் மற்றும் ஓட்டுநர்களுக்கான ‘மத்திய ஆன்லைன் தரவுதளம்’ ஒன்றை உருவாக்கும் நோக்கிலேயே இந்தப் புதிய விதிமுறைகள் கொண்டுவரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனடிப்படையில், போக்குவரத்து காவல் துறையினருக்கு, ஒரு கையடக்க தகவலறி கருவியும் (handy tracking device) வழங்கப்படும். அதன்மூலம், QR குறியீட்டில் பதிவாகியிருக்கும் அனைத்துவித (கடந்தகாலம் உட்பட) விபரங்களையும் சம்பந்தப்பட்ட காவலரால் கண்டறிய முடியும்.
மேலும், பதிவு அட்டையில், ஒரு சிப் பொருத்தி, கூடுதல் அம்சங்களை சேர்க்க மாநில அரசுகளுக்கு அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
– மதுரை மாயாண்டி