தென்காசி

முதல்வர் பழனிச்சாமி தென்காசி தலைமையில் புதிய மாவட்டம் அமைப்பது குறித்து பரிசீலனை செய்யப்படுவதாக அறிவித்தார்.

திருநெல்வேலி மாவட்டம் தென்காசியை சேர்ந்த முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையா அமமுகவில் இருந்து விலகி அதிமுகவில் தனது ஆதரவாளர்களுடன் இணைந்தார். இதற்காக ஒரு விழா ஒன்று தென்காசியில் நேற்று நடந்தது. இதில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, “அதிமுக வில் இருந்து வழி மாறி சில கருப்பு ஆடுகள் சென்றதால் கட்சி மிகவும் தூய்மை அடைந்துள்ளது.  தேனியைப் போல் தேர்தலில் வெற்றிகளை அதிமுக குவிக்க தொண்டர்கள் பாடுபட வேண்டும். முக ஸ்டாலினின் முதல்வர் கனவு என்றும் நிறைவேறப் போவதில்லை.

தற்போது உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் அணி செயலாளர் பதவி வழங்கி தான் ஒரு குடும்பக் கட்சி என்பதை திமுக மீண்டும் நிரூபித்துள்ளது. தென் காசியை தலைமையகமாக கொண்டு புதிய மாவட்டம் அமைக்கும் பணி அரசின் பரிசீலைனையில் உள்ளது. விரைவில் இது குறித்து முடிவு எடுக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.