புதுடெல்லி:
டெல்லியின் புதிய துணை நிலை ஆளுநராக வினய்குமார் சக்சேனா நியமனம் செய்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.

தலைநகர் டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி ஆட்சி செய்து வருகின்றது. இந்த மாநிலத்தில் கடந்த 2016ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியான அனில் பைஜால் துணை ஆளுநராக நியமிக்கப்பட்டார். பதவிக்காலத்தில் அவருக்கும் டெல்லியை ஆளும் ஆம் ஆத்மி அரசுக்கும் இடையே பல விஷயங்களில் மோதல் ஏற்பட்டு வந்தது.

இதற்கிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு அனில் பைஜால் பதவியிலிருந்து ராஜினாமா செய்தார். அதற்கான கடிதத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களுக்கு அனுப்பி வைத்தார். தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் பதவி விலகி உள்ளதாக கூறி இருந்தார். இந்நிலையில் டெல்லியில் புதிய துணை நிலை ஆளுநராக வினய்குமார் சக்சேனாவை நியமனம் செய்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார்.