டில்லி:
சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தலின்படி டில்லியில் இன்று காவிரி கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்று வருகிறது.
caauver

 மத்திய நீர்வளத்துறை செயலாளர் சசிசேகர் தலைமையில், தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் மற்றும் மத்திய நீர்வள ஆணையத்தின் உயர் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

தமிழகத்தின் தண்ணீர் தேவை குறித்தும், கூடுதல் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்ற கோரிக்கை பற்றியும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.
 
காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படி, தமிழகத்திற்கு  50 டி.எம்.சி. தண்ணீரை திறந்து விடக்கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் இடைக்கால மனுதாக்கல் செய்தது.  மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் தமிழ்நாட்டின் விவசாய தேவைக்காக வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி வீதம் தொடர்ந்து 10 நாட்களுக்கு காவிரியில் இருந்து தண்ணீரை திறந்துவிடவேண்டும் என்று கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வருகிற 16-ந்தேதிக்கு ஒத்திவைத்தது.
மேலும் இந்த தண்ணீர் அளவு போதுமானதாக இல்லை என்றால் தமிழக அரசு காவிரி  கண்காணிப்பு குழுவில் மனு தாக்கல் செய்யலாம் என்றும் இதேபோல் கர்நாடக அரசும் மனுச் செய்யலாம் என்றும், இரு தரப்பு கருத்துகளையும் கேட்டு காவிரி கண்காணிப்பு குழு உச்சநீதிமன்றத்தில் அறிக்கையாக தாக்கல் செய்யவேண்டும் என்றும் உத்தரவிட்டது.
இதையடுத்து,  உச்சநீதிமன்ற உத்தரவின்படி தமிழ்நாடு, கர்நாடகம் ஆகிய இரு மாநிலங்களும் காவிரி மேற்பார்வை குழுவிடம் தங்களது கோரிக்கை மனுக்களை தாக்கல் செய்தன. தற்போது நடைபெற்று வரும் கூட்டத்தில் 4 மாநில அரசுகளின் சார்பில் தெரிவிக்கப்படும் கருத்துகளின் அடிப்படையில் மேற்பார்வை குழு அறிக்கை ஒன்றை தயாரித்து சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யும்.
தமிழக அரசின் இடைக்கால மனு வருகிற 16-ந் தேதி மீண்டும் விசாரணைக்கு வரும் போது, அந்த அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டு பரிசீலித்து முடிவு எடுக்கும் என்று தெரிகிறது.
தமிழக அரசின் மனுவில் தற்காலிகமாக 64 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிடப்படவேண்டும் என கூறப்பட்டுள்ளது.
கர்நாடக அரசின் மனுவில் தங்களது அணைகளில் மொத்தமே 47 டி.எம்.சி. தண்ணீர்தான் உள்ளது என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது. மேலும் ஒரு குழுவை அனுப்பி மேட்டூர் அணையில் உள்ள நீர் இருப்பு, தமிழகத்தில் காவிரி பாசன பகுதியில் அமைந்துள்ள நீர்நிலைகளின் நீர் இருப்பு ஆகியவற்றை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் கர்நாடகத்துக்கும் குழுவை அனுப்பி ஆய்வு செய்யவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டு உள்ளது.
இந்த ஆய்வுக்கு பின்னரே அடுத்த கட்ட முடிவை எடுக்க வேண்டும் என்றும் கர்நாடகம் கோரிக்கை விடுத்து இருக்கிறது.