சென்னை: கோடை வெயில் தாக்கம் காரணமாக 1 முதல் 5ம் வகுப்பு ஆண்டு இறுதித்தேர்வுகளை  தேதிகளை மீண்டும் மாற்றி தொடக்கக் கல்வித்துறைஅறிவித்து உள்ளது.

தொடக்கல்வித்துறை சார்பில், நடப்பாண்டு 1முதல் 5ம் வகுப்பு வரையிலான ஆண்டிறுதி தேர்வுகளை ஏப்ரல் 15க்குள் முடிக்க திட்டமிட்டருந்தது. பின்னர், திடீரென வேறு தேர்வு தேதிகளை அறிவித்தது. அதன்படி 1 முதல் 8ம் வகுப்புவரை  ஆண்டு இறுதி தேர்வு ஏப்ரல் 8ந்தேதி முதல் 24ந்தேதிவரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.  அதுபோல அனைத்து வகுப்புகளுக்கும் ஒரே கேள்வித்தாள் என்றும் கூறப்பட்டிருந்தது.

இதுதொடர்பான  பள்ளிக்கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில்,  கல்வியாண்டின் தேதி தவறாக போடப்பட்டிருந்ததும் விவாதப்பொருளாக மாறியது. தவறான அந்த அறிக்கையில்,   பள்ளிக்கல்வி இயக்ககம், தொடக்கக்கல்வி இயக்ககம் மற்றும் தனியார் பள்ளிகள் இயக்ககம் ஆகியவற்றின் இயக்குநர்கள் கையெழுத்திட்டிருந்தனர். ஒருவர்கூட அந்த தவறை கண்டுபிடிக்கவில்லை என கேள்வி எழுப்பப்பட்டது. பின்னர், தவறு திருத்தப்பட்ட புதிய ஆணை வெளியிடப்பட்டது.

இந்த நிலையில், தற்போது, தொடக்க கல்வித்துறை ஆண்டிறுதி தேர்வு தேதியை மாற்றி அறிவித்து உள்ளது. அதன்ப டி,  1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முன்கூட்டியே ஆண்டுத் தேர்வு நடத்தப்பட உள்ளதாக தொடக்கக் கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது.

 இது குறித்து தொடக்க கல்வி இயக்குநகரம்  வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  “தொடக்கக் கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 09.04.2025 முதல் 21.04.2025 வரை மூன்றாம் பருவத் தேர்வு / ஆண்டு இறுதி தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் தற்போது தீவிரமாக இருப்பதால் பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகள் மற்றும் பெற்றோர்களின் வேண்டுகோளை ஏற்று தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின்படியும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சரின் வழிகாட்டுதல்களின்படியும் தேர்வுகள் முன்கூட்டியே தொடங்க திட்டமிடப்பட்டு உள்ளது.

வருகின்ற 07.04.2025 முதல் 17.04.2025 வரை தேர்வுகள் நடைபெறும் என தொடக்கக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.  ஆனால், ஆசிரியர்கள் ஏப்ரல் இறுதிவரை பள்ளிகளுக்கு வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருப்பதாக ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.